வட மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்கான தீர்வுகளை வழங்குமாறு சுகாதார அமைச்சரிடம், கௌரவ ஆளுநர் கோரிக்கை.

வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தலைமையில் இன்று (17/07/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் P.G. மஹிபால, வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.

அத்துடன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

இந்த விசேட கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள்,

“ சுகாதார மற்றும் கல்வித் துறைகளே நாட்டில் மிகவும் சிக்கல் வாய்ந்தவைகளாக காணப்படுகின்றன. இந்த இரண்டு துறைகளிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர். எனினும் மாகாணத்தை பொறுத்தவரையில் எங்களுக்கு பல சவால்கள் காணப்படுகின்றன. வளப்பற்றாக்குறை காணப்படுவதுடன், எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களும் காணப்படுகின்றன. சுகாதார துறையில் பல விடயங்களை மேம்படுத்த வேண்டிய தேவைக் காணப்படுகின்றது. நோய் தடுப்புக்களை மேற்கொள்வதுடன் நோயாளர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறே எனது அதிகாரிகளுக்கு நான் கூறி வருகின்றேன். வரையறுக்கப்பட்ட வளங்களை பயன்படுத்தி சிறந்த சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மாகாண சுகாதார துறையை மேம்படுத்துவது தொடர்பில் எனது அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றேன். அத்துடன் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் நான்கு வைத்தியசாலைகளில் திறந்துவைக்கப்பட்ட விசேட பிரிவுகளிலும் வளங்களை பகிர்ந்து பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகிறது. முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் காணப்படும் வைத்தியசாலைகளின் குறைப்பாடுகள் தொடர்பில் அறிந்துள்ளோம். குறித்த வைத்தியசாலைகள் தொடர்பான முன்மொழிவுகள் தயார் செய்யப்பட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளன. மக்களை பாதுகாப்பதற்கான அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்கு தீர்வுகளை வழங்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தேன். இந்த விடயம் தொடர்பில் விரைவில் தீர்வுகளை பெற்றுத்தருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.” எனத் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.