உ.பி.யில் 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்ததாக ஆட்சியரிடம் புகார்: இளைஞரின் பிரச்சினையை தீர்த்துவைத்த தமிழக அதிகாரி

புதுடெல்லி: உ.பி.யின் பத்தேபூர் மாவட்டம் சவுரா கிராமத்தில் வசிப்பவர் விகாஸ் துபே (24). இவர் தன்னை கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்ததாக தமிழரான மாவட்ட ஆட்சியர் சி.இந்துமதியிடம் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக தீரவிசாரிக்க முடிவு செய்த ஆட்சியர் இந்துமதி,மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் நயன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டார். 48 மணிநேர விசாரணைக்கு பிறகுஅதன் அறிக்கை ஆட்சியர் இந்துமதியிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

விசாரணை அறிக்கையில், “விகாஸை ஒரே ஒருமுறை பாம்பு கடித்துள்ளது. இதில் ஏற்பட்ட அச்சத்தால் அவருக்கு பாம்பு பீதி உருவாகி விட்டது. இதனால், அவர் அடிக்கடி தன்னை பாம்பு கடித்து விட்டதாக எண்ணி அச்சப்படுகிறார். இதனால் அவர் 6 முறை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.



விகாஸை கடந்த ஜூன் 2-ம் தேதி பாம்பு கடித்த முதல் சம்பவத்துக்கு பிறகு அவர் பாம்பு குற்றம் செய்துவிட்டதாக சவுரா கிராம வாசிகள் கூறினர். பாம்புகள் எப்படியும் கொல்லாமல் விடாது என விகாஸை அச்சுறுத்தி வந்தனர். அவர் பீதியடைய இதுவே காரணமாக கூறப்படுகிறது.

பாம்பு கடி சிகிச்சைக்கு பணப் பற்றாகுறையால் விகாஸ் குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். இதனால் எழுந்த சந்தேகத்திற்கு விசாரணை குழு அமைத்து ஆட்சியர் இந்துமதி, முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மதுரை மாவட்டம் பூலாம்பட்டியை சேர்ந்தவரான ஆட்சியர் இந்துமதியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இச்சாதாரி பாம்பு: இதேபோல் உ.பி.யின் பூல்பூர் மாவட்டம் பத்வாபூர் கிராமத்தில் 2015 ஏப்ரலில் இச்சாதாரி பாம்பு என்று தன்னை கூறிக்கொண்ட சந்தீப் படேலுக்கு (27) திருமணம் நடைபெற இருந்தது. இவரது அருகில் மணப்பெண்ணாக ஒரு நாகம் இருந்துள்ளது. இவர்கள் முன் ஒரு பண்டிதரும் மந்திரம் கூற, பாம்புக்கு தாலி கட்டும் நேரத்தில் அங்கு உ.பி. போலீஸார் வந்தனர். சந்தீப்பை கைது செய்தனர்.

பெண் பாம்பு மறுபிறவி: 2006 ஆகஸ்ட் மாதம் நடந்த மற்றொரு சம்பவத்தில் எட்டாவா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் முன் ஜென்மத்தில் தான் ஒரு பெண் நாகமாக இருந்ததாக கூறினார். அருகிலுள்ள புஜுர் கிராமத்தின் சிவன் கோயில் கிணற்றில் ஆண் நாகத்துடன் வாழ்ந்து வந்ததாக கூறினார்.

தன்னுடன் சேர்த்து கொல்லப்பட்ட ஆண் நாகம், மீண்டும் இளைஞனாக அதே கிராமத்தில் பிறந்து வாழ்வதாகவும் அவருக்கு முதுகில் மச்சம் இருக்கும் என்று கூறி ஒரு இளைஞனை அடையாளம் காட்டினார்.

பிறகு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலிப்பதும் கவுரவக் கொலைக்கு அஞ்சி திட்டமிட்டு நாடகம் நடத்தியதும் தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.