கடந்த இரு வருடங்களில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஊழியர்களுக்கான சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் நிறுத்தாமல் அரசாங்க நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டன

  • அதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டல்கள் பக்கலமாக அமைந்தன -உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த.
  • அரசாங்க சேவைக்கு அத்தியாவசியமான வெற்றிடங்களுக்கு படிப்படியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது.
  • அரச சுற்றுலா விடுதிகள், பங்களாக்களை சுற்றுலா வர்த்தகத்திற்காக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தோம்.
  • கம்பஹா “நில பியச” வேலைத்திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கான ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மே மாதத்திலிருந்து ஓய்வூதிய கொடுப்பனவுகள் தாமதமின்றி வழங்கப்படுகிறது – ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்.

கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்திலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்தவொரு அரச ஊழியருக்கும் சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் குறைவின்றி வழங்கி அரச சேவையை முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளமை பெரு வெற்றியாகும் என்றும், அதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய அறிவுரைகள் பக்கபலமாக அமைந்திருந்தாகவும் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

”கடந்த இரு வருடங்கள் மிகக் கஷ்டமாக அமைந்தது. நாம் கொவிட், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டியிருந்தது. சம்பளமும், கொடுப்பனவுகளும் நிறுத்தப்படலாம் என்றும் சிலர் சிந்தித்தனர்.

அரசாங்க சேவை முடங்கிவிடும் என்றும் நினைத்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுக்கமைய அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக அரச சேவையைப் பாதுகாக்க முடிந்தது.

இது மிகப்பெரிய வெற்றியாகும். அதற்கு அரச ஊழியர்கள் மற்றும் நாட்டு மக்களின் முழுமையான பங்களிப்பு கிடைத்திருந்தது என்பதையும் நினைவுகூற வேண்டும்.

தேர்தல் பற்றி இன்று பலர் பல இடங்களில் பேசினாலும் அதற்கு தகுந்த சூழலை உருவாக்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அர்பணித்துள்ளது என்பதையும் நினைவுபடுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.

மேலதிகச் செயலாளர் (உள்நாட்டு அலுவல்கள்) மற்றும் இணைந்த சேவைகளுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆலோக பண்டார,

”கொவிட் – பொருளாதார நெருக்கடியின் விளைவாக 2020 – 2022 ஆம் ஆண்டுக்குள்
அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது மட்டுப்படுத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் முற்றாக நிறுத்தப்பட்டது. அதனால் அரச சேவை நிறுவனங்களின் பணிக்குழு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதனடியே உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் ஆறு சேவைத் துறைகளுக்கும், இணைந்த சேவைகள், கிராம சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய தீர்மானித்தது. அந்த தீர்மானத்துக்கு அரசாங்க சேவை ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வெற்றிடங்களுக்கு மாத்திரம் ஆட்சேர்ப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல் ஆட்சேர்ப்புக்கான பரீட்சைகளில் காணப்பட்ட தாமதத்தை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வருடத்திற்கு இரண்டு தடவைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டும் விசேட தர நிலைக்கு தரம் உயர்த்தும் பணிகளும் ஜூலை 1 ஆம் திகதியிலிருந்து துரிதப்படுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

மேலதிகள் செயலாளர் (உள்நாட்டு நிர்வாகம்) மகேஷ் கம்மன்பில,

”அரச நிறுவனங்களுக்கு சொந்தமான சுற்றுலா விடுதிகள் மற்றும் பங்களாக்களை பயன்படுத்திக்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொள்ளுமாறு 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அதன்படி குறைந்தளவில் பயன்படுத்தப்படும் சுற்றுலா விடுதிகளையும் பங்களாக்களையும் அரச மற்றும் அரை அரச சேவைப் பிரிவுகளுக்கு வழங்கும் அதேவேளை, அரசாங்கத்துக்கு வருமானம் ஈட்டித்தரும் வகையில் செயற்படும் தரப்பினருக்கு அவற்றை வழங்கவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கத்தின் வசமாகவிருக்கும் 720 விடுதிகள் மற்றும் சுற்றுலா பங்களாக்களில் சுற்றுலா வர்த்தகத்துக்காக 3750 அறைகளைப் பெற்றுக்கொடுக்கும் இயலுமை இருக்கிறது. அதற்காக 2024 வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரச நிர்வாக , உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சுற்றுலா பங்களா, விடுதிகள் ஆகியவற்றை இணைய முறையில் ஒதுக்கீடு செய்வதற்கும் கொடுப்பனவுகளை செய்வதற்குமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.

மேலதிக செயலாளர் (உள்நாட்டு அலுவல்கள் ) டபிள்யூ.எம்.ஏ.பீ.பி .வன்னிநாயக்க,

”அரச ஊழியர்களுக்கு இருப்பிட வசதிகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட 32 வீட்டுத் தொகுதிகளை உள்ளடக்கிய நில பியச வேலைத்திட்டம் 2023 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் இணைய முறையில் கோரப்பட்டு பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் மட்டக்களப்பு மாவட்டச் செலகத்தின் 92% பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. மஹியங்களை, ஹாலி-எல, ஹோமாகம, லுனுகம்வெஹெர, ஜா-எல பிரதேசய செயலக கட்டிடங்களின் நிர்மாண பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் முந்தல் மற்றும் மஹவிலச்சிய பிரதேசய செயலக கட்டிடங்கள் 369 மில்லியன் ரூபா செலவில் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த மார்ச் – ஜுன் மாதங்களில் திறக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டில் களுத்துறை – மாதுருவெல மற்றும வல்லாவிட பிரதேச செயலக கட்டிடங்களும் கம்பஹா மாவட்ட செயலக கட்டிடமும் வத்தளை பிரதேச செயலக அலுவலகமும் அநுராபுரம் மாவட்டத்தின் நுவரகம்பலாத பிரதேச செயலக கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டயஸ்,

”இந்த வருடத்தின் ஜனவரி 02 ஆம் திகதியிலிருந்து முப்படையினரின் ஓய்வூதிய தொகையில் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பம் இணைய முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கடல் பாதுகாப்பு சேவை, கடற்படை படகுகளில் சேவையாற்றும் அரச ஓய்வூதியதாரர்களுக்கு நாட்டிலிருந்து புறப்படும் முன்னதாக உயிர்ச் சான்றிதழ்களை பிரதேச செயலகங்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு அல்லாத சந்தர்ப்பத்தில் வௌிநாடுகளில் உள்ள இலங்கை தூதுக்குழுக்கள் வாயிலாக சான்றிதழ்களை உறுதிப்படுத்தி பிரதேச சபைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளல், முகாமைத்துவம் செய்தல், புதிய தகவல்களை இணைக்க தொழில்நுட்பக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தல், தாமதமின்றி ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஓய்வூதியதாரர்கள் ரயில் நிலையங்களுக்குச் செல்லாமல் ரயில் டிக்கடுக்களை பதிவு செய்துகொள்வதற்கான இணைய முறை மூலமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.

உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, மேலதிகள் செயலாளர் (உள்நாட்டு அலுவல்கள்) ஆர்.ஏ.சீ.எஸ்.ரணவீர ஆராச்சி, மேலதிகச் செயலாளர் (உள்நாட்டு அலுவல்கள்) ஏ.ஜீ.நிஷாந்த, சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ.டீ.டீ.சலங்க,மேலதிகச் செயலாளர் (மனித வளம்) புத்தி தரங்கா கருணாசேன,பணிப்பாளர் நாயகம் (நிறுவனங்கள்) சந்தன குமாரசிங்க, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ, பதிவாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஆர்.ஏ.என்.எஸ்.விஜயசிங்க, அரசகரும மொழிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரின்ஸ் சேனாதீர,மேலதிகள் செயலாளர் (பிரதேச நிர்வாக மறுசீரமைப்பு) வருண ஸ்ரீ தனபால , சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அரச சேவை மறுசீரமைப்பு)சம்பிக ராமவிக்ரம மற்றும் இணைந்த சேவைகள் பணிப்பாளர் ஏ.எம்.மனோஜ நீதீஷன அமரசிங்க உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.