மக்கள் பதற்றம், மன அழுத்தத்திலிருந்து விடுபட புதிய சட்டம் ஒன்றை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது.
ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் உள்ளூர்வாசிகளின் உடல், மன நலனைக் காக்கும் பொருட்டு ஒருநாளுக்கு ஒருமுறையாவது அவர்கள் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்று அம்மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகமாகச் சிரிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதாக யமகட்டா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. மன இறுக்கத்தைச் சிரிப்புப் பயிற்சி குறைப்பதுடன் இதயப் பாதிப்பு உள்ளிட்ட தீவிரப் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதற்காக 40 வயதுக்கு மேற்பட்ட ஆயிரக்கணக்கான நபர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் இச்சட்டத்தை யமகட்டா மாகாண அரசு கொண்டுவந்திருக்கிறது.
சட்டம் என்ன சொல்கிறது?
இச்சட்டத்தின்படி ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாள், ‘சிரிப்பின் மூலம் ஆரோக்கியம் மேம்படும் நாள்’ எனக் கொண்டாடப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினசரி சிரிக்கத் தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும் எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தினைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
மேலும், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் ஒருநாளுக்கு ஒருமுறையாவது சிரிப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விமர்சனம்
ஜப்பானின் இந்தச் சிரிப்புச் சட்டம் தனிமனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதயப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிலரால் மருத்துவக் காரணங்களால் சிரிக்க முடியாமல் போகலாம். அவ்வாறான சூழலில் இச்சட்டம் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இச்சட்டத்தை அமல்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்திவருகின்றனர்.