சென்னை: சிறப்புப் பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளுக்கு விநியோகிப்பதற்காக 4 கோடி பாமாயில் பாக்கெட்கள், 40 ஆயிரம் டன் துவரம் பருப்பு கொள்முதலுக்கு தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.
தமிழகத்தில் குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றுடன், சிறப்புப் பொது விநியோக திட்டத்தில் ஒரு லிட்டர் பாமாயில், ஒரு கிலோ துவரம் பருப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பொருட்கள், தனியாரிடம் இருந்து ஒப்பந்தம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக கொள்முதலில் ஏற்பட்ட சிக்கலால், பாமாயில், துவரம்பருப்பு விநியோகத்தில் மந்தம் ஏற்பட்டது.
மே மாதம் வாங்காதவர்களுக்கு ஜூன் மாதத்திலும், ஜூன் மாதம் வாங்காதவர்களுக்கு ஜூலை மாதத்திலும் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதிலும், சில இடங்களில் பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடும் நிலவியது. இதற்கிடையில் இப்பொருட்களின் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகவும், பொருட்களை நிறுத்த திட்டமிட்டிருப்பதாகவும் இரு வேறு விதமான செய்திகள் வெளியாகின.
அதனால், பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இப்பொருட்களை நிறுத்தக்கூடாது, தொடர்ந்து வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர். இந்தச் சூழலில், அடுத்த 2 மாதங்களுக்கு விநியோகிப்பதற்கான பாமாயில் பாக்கெட்கள், துவரம்பருப்பு கொள்முதலுக்கு தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. குறிப்பாக, அடுத்த 2 மாதங்களுக்கான 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 40 ஆயிரம் டன் துவரம் பருப்பைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
குறிப்பாக, விரைவாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வகையில் குறுகிய கால ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயிலை எந்தவித தங்கு தடையுமின்றி விநியோகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.