இந்திய அணியின் டி20 கேப்டன்… எனக்கு இவர்தான் வேணும்… பிசிசிஐக்கு கம்பீர் வைத்த செக்!

Gautam Gambhir, Indian National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர், இளம் வீரர்கள் அடங்கிய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை வென்ற நிலையில், தற்போது அடுத்த சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகிறது.

இலங்கை சுற்றுப்பயணத்தில் டி20 தொடரிலும் சரி, ஓடிஐ தொடரிலும் சரி இளம் வீரர்கள் உடன் நிச்சயம் சீனியர்களும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டி20 உலகக் கோப்பையோடு ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், அந்த பொறுப்புக்கு கௌதம் கம்பீர் பிசிசிஐயால் புதிதாக நியமிக்கப்பட்டார். இலங்கை தொடர் முதல் கௌதம் கம்பீர் இந்திய அணியுடன் இணைந்துகொள்வார் என தெரிகிறது.

அடுத்த டி20 கேப்டன் யார்?

அந்த வகையில், இலங்கை சுற்றுப்பயணம் மீது எதிர்பார்ப்பும் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற இருப்பதாலும், ரோஹித் – விராட் – ஜடேஜா ஆகியோரின் ஓய்வுக்கு அவர்களின் இடத்தை எந்தெந்த வீரர்கள் நிரப்பப் போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின்னர் அவரின் கேப்டன்ஸி பொறுப்பை யார் ஏற்கப்போகிறார்கள் என்பதும் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

இன்றோ அல்லது நாளையோ இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி வீரர்கள் தேர்வுக்குழுவால் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில், திடீரென பரபரப்பான சில தகவல்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாதான் தற்போது கேப்டன் பொறுப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சூர்யகுமாரின் பெயரும் அதில் அடிபடுகிறது. 

கம்பீர் சொன்னது என்ன?

மேலும், ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களால் இலங்கை சுற்றுப்பயணத்தை தவறவிடக்கூடும் என கூறப்படுகிறது. எனவே, அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முன்னர் வரை இந்திய அணி மோதும் பெரும்பாலான டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவே கேப்டனாக செயலாற்றுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த கேப்டன்ஸி விவகாரம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பிசிசிஐயின் தேர்வுக்குழுவுக்கு தனது தேர்வை கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கம்பீர் தேர்வுக்குழுவிடம், ஒரு வீரரை குறிப்பிட்டு இவர்தான் கேப்டனாக வேண்டும் என கூறாமல், காயம் குறித்த அச்சம் இல்லாமலும், வேலைப்பளூ குறித்த அச்சம் இல்லாமலும் விளையாடும் வீரரை கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும் என கூறியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதில்,”சூர்யகுமார்தான் வேண்டும் என கௌதம் கம்பீர் எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக, தனக்கு பணிச்சுமை, காயம் ஆகியவை முட்டுக்கட்டையாக இருக்காத ஒரு கேப்டனுடன் பணிபுரிய விரும்பம் என கௌதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார். தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அவரது நிலைப்பாட்டிலும் தெளிவாக இருக்கிறார்” என பிசிசிஐ வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் ஊடகத்திற்கு தகவல் அளித்தார்.

கம்பீர் எதிர்பார்ப்பது என்ன?

எதிர்காலத்தில் பல முக்கிய டி20 தொடர்கள் நடைபெற இருப்பதாலும், இந்திய அணியில் ஆரோக்கியமான சூழல் நிலவுவதற்கும் என ஒரு நீண்ட கால திட்டங்களை மனதில் வைத்தே கௌதம் கம்பீர் இவ்வாறு யோசிக்கிறார் என கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் காரணமாகவும், வேலைப்பளூ காரணமாகவும் பல்வேறு தொடர்களை தவறவிடுவிகிறார் என்பதால் அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் போலான வீரர்களுக்கு கேப்டன்ஸி கொடுப்பது ஆரோக்கியமானதாக இருக்கும் என கௌதம் கம்பீர் நினைத்திருக்கலா்ம என கூறப்படுகிறது. இருப்பினும் முடிவு இன்னும் சில மணிநேரங்களில் தெரிவித்துவிடும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.