ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து UPSC / TNPSC – I ,II தேர்வுகளில் வெல்வது எப்படி ? என்கிற தலைப்பில் மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி பயிலரங்கு சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் சென்னையைச் சுற்றி பல்வேறு இடங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்வின் தொடக்கமாக மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்புக்கான தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் ஆர். சுதாகர் ஐபிஎஸ், கோ- ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் டாக்டர். ஆர். அனந்தகுமார் ஐஏஎஸ், கிங் மேக்கர்ஸ் அகாடமி இயக்குனர் சத்ய ஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
போட்டித் தேர்வுகள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் வகையிலும், தேர்வு குறித்தான விழிப்புணர்வினை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட நிகழ்வில் பேசிய கிங்மேக்கர்ஸ் அகாடமியின் இயக்குநர் சத்ய ஸ்ரீ பூமிநாதன், ” சிவில் சர்வீஸ் தேர்வுனாலே கடினமாகத்தான் இருக்கும்னு நினைக்கிறோம். புத்திசாலிகள்தான் அந்தத் தேர்வை எழுதுவாங்க. அந்த தேர்வுல பாஸ் பண்ணுனா நம்ம வெளி மாநிலத்துக்கு போய் வேலை செய்யனும். ஆங்கில வழியில அதிக புலமை இருக்கணும். UPSC-னா ரொம்ப கஷ்டம். TNPSC-னா ரொம்ப ஈசிங்கிற புரிதல்தான் நம்மகிட்ட இருக்கு. சிவில் சர்வீஸ் ஃபீல்டுல வரணும்னா நமக்கு பொறுமை ரொம்ப அவசியம். சிவில் சர்வீஸ் பெரிய கடினம்லாம் இல்ல. பள்ளிக்கூடத்தில் படிக்கிற புத்தகங்களைதான் கொடுக்குறோம்.
பெரிய கஷ்டமெல்லாம் கிடையாது. ஆனால் இடைவிடாத முயற்சியும் பயிற்சியும் அவசியம். UPSC தேர்வுக்கு ஸ்கூல் புக்ஸ் படிக்கிறது, ரைட்டிங் பிராக்டிஸ் , இன்டர்வியூ இந்த மூணுமே ரொம்ப முக்கியம். அதேபோல நாம எந்த புக்கை படிக்கணும் எதை படிக்கக் கூடாதுன்னு நமக்குத் தெரியணும். எங்களோட நோக்கமே சிவில் சர்வீஸ் தேர்வுல தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வரணும்.
அதற்காகத்தான் இந்த மாதிரியான பயிற்சி முகாம்களைத் தொடர்ந்து நடத்திட்டு வர்றோம். நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை சிவில் சர்வீஸ் தேர்வுல வெற்றிபெறச் செய்வதுதான் எங்களோட நோக்கம். நாங்க மாணவர்களுக்காகத் தொடர்ந்து இதை நடத்திட்டு இருக்கோம். பிரிம்ல்ஸ் (prelims) பாஸ் பண்ணின மாணவர்களுக்கு நாங்க எந்தக் கட்டணமும் வாங்காமல்தான் கோச்சிங் கொடுத்துட்டு இருக்கோம். இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் எக்ஸாம் வச்சி மாணவர்களை ஊக்குவிச்சிட்டு வர்றோம். எங்களை பொறுத்தவரைக்கும் மாணவர்கள் தமிழகத்திலிருந்து வரணும். நிறைய பேர் பாஸ் பண்ணலனாலும் தொடர்ந்து எழுதணும் ” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசத் தொடங்கிய சென்னை கூடுதல் போக்குவரத்து ஆணையர் ஆர். சுதாகர் ஐஏஎஸ் “மனம் போல் ரிசல்ட்” என்ற தலைப்பில் உரையாற்றத் தொடங்கினார். “எப்பயும் நம்ம மனசு என்ன சொல்லுதோ அதுதான் ரிசல்ட். எந்த வேலையும் கிடைக்கல. எதாவது வேலை வேணுங்கிறதுக்காக இந்த சிவில் சர்வீஸ் தேர்வை எழுதக் கூடாது. நான் ஒரு சிவில் சர்வண்ட்ன்னு நினைச்சிட்டுதான் தேர்வு எழுதுனேன். சின்ன வயசில் எங்கப்பாவுக்கு நான் போலீஸ் ஆகணும்னு ஆசை. 6 ஆம் வகுப்புல இருந்து 12ஆம் வகுப்பு படிக்கிற வரை லைப்ரரி போய் தினமும் படிப்பேன். எங்கப்பா என்னை தொடர்ந்து ஐஏஎஸ் படிக்கணும்னு ஊக்கப்படுத்திட்டே இருந்தாங்க.
சென்னையில இன்ஜினீயரிங் முடிச்சிட்டு கோச்சிங் போய் படிச்சேன். நானும் சிவில் சர்வன்ட்டாவே ஆகிட்டேன். உங்களுடைய எண்ணமும் ஆசையும் என்ன நினைக்குதோ அதுதான் நடக்கும். ரொம்ப முக்கியம் நம்ம ஸ்ட்ராங்கா (strong) போக்கஸ் பண்ணி படிக்கிறது. மத்தவங்களுக்காக படிக்கக்கூடாது. எவ்ளோ நேரம் பாடம் மனசுல பதியுதோ அவ்ளோ நேரம் மட்டும் படிங்க. நான் தினமும் 6-ல இருந்து 8 மணி நேரம் வரைதான் படிப்பேன். ஆனால் 24மணி நேரமும் சிவில் சர்வீஸ்தான் என்னோட நோக்கமாக இருந்துச்சு . இடையில எனக்கு ‘அழகி’ படம் பாக்கனும்னு தோணவே படம் பாத்துக்கிட்டு வந்து படிச்சேன். நமக்கு சின்ன சின்ன ஆசை இருக்கும். ஆசையை மனசுல வச்சிட்டே படிக்கமுடியாது. ஆசையை நிறைவேத்திக்கிட்டு படிக்க உட்கார்ந்திரணும். நமக்கு ஒரு பாடம் பிடிச்சிருக்குங்கிறதுக்காக அந்த பாடத்தை மட்டுமே படிப்போம். அப்படி படிக்க கூடாது. அதுசார்ந்த நிறைய பாடங்களை படிக்கனும்.
எங்கேயும் டைவர்ட்( divert) ஆகக் கூடாது. ஒவ்வொரு நாளையும் வீணாக்காமல் என்ன பண்ணப்போறோம்ங்கிறதை தெளிவா குறிச்சு வச்சு நடக்கணும். நம்ம என்னவாக நினைக்கிறோமோ அதான் நமக்குப் பிரதிபலிக்கும். படிக்கிறதை நம்ம சுதந்திரமாக படிக்கணும். புத்தகங்கள்தான் நம்மளோட பிரச்னையைக் குறைக்கும். நீங்க படிச்சு முன்னேறும்போது உங்களோட வாழ்க்கையும் மாறும். நீங்க மக்களோட வாழ்க்கையை மாத்துறதுக்கான சக்தியாவும் மாறுவீங்க” என்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
இறுதியாக கோ – ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் டாக்டர் ஆர். ஆனந்த குமார் ஐஏஎஸ் “மாற்றி யோசித்து எழுதலாம்” என்கிற தலைப்பில் மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு உரையாடத் தொடங்கினார். ” நம்மள எப்பயும் ஃபோர்ஸ் பண்ண கூடாது. நமக்கு என்ன வருதோ அதை செய்யனும். எப்பயும் உட்கார்ந்து படிக்கனும்னு அவசியம் இல்லை ஆனா அதுல நம்ம உறுதியாக இருக்கனும். நமக்கு தெரிஞ்ச விஷயங்களோட கனெக்ட் பண்ணி ரெடியா வச்சிக்கிறதுதான் நம்மளோட மெமரி. நமக்கு பாடம் படிக்கிறதை விட, படம் பார்க்கிறதை விட எழுதுறது தான் மெமரில பதியும். ஸ்கூல் படிக்கும்போது அதுக்காகதான் நமக்கு இம்போசிசன்லாம் கொடுக்குறாங்க. ரொம்ப முக்கியமா சொல்லனும்னா நம்ம பணிபுரியறதுக்கும், வெற்றி பெறுவதற்கும் எமோஷனல் இன்டலிஜன்ஸ் (emotional intelligence) அப்படிங்கிற ஆற்றல் தேவைப்படுது.
தேர்வுகள் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்ள தொடங்கி குறிப்பிட்ட காலத்துகக்குள்ள முடிவிற்கு கிடையாது. ஆனால் பெற்றோர்கள் அப்படித்தான் நினைக்கிறாங்க. ஒரு டிகிரி முடிக்கிற மாதிரி காலகட்டத்துக்குள்ள தேர்வுகளை முடிக்க முடியாது. மாணவர்கள் நாட்குறிப்பு எழுதுற பழக்கத்தை வளர்த்துக்கணும். நம்மளோட மனசுக்கு நம்ம என்ன ஆகணும்னு நினைக்கிறோமோ அதுதான் ஆவோம். நம்ம இலக்கு மேல போகஸா (focus) இருக்கனும். நம்ம தமிழ்வழிக் கல்வில படிக்கிறோம்னு கவலை படக்கூடாது. நம்மளோட தாய் மொழியில படிக்கும் போது இன்னும் எளிமையாக புரிஞ்சுக்க முடியும். நம்ம தொடர்ந்து முயற்சி செய்யணும்.
நிறைய புத்தகங்களை படிங்க” என்றவர் பல்வேறு விதமான புத்தகங்களை உரையாடும் போது மாணவர்களுக்கு பரிந்துரை செய்தார். உலக சினிமாக்களையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த மாணவர்கள் இந்த நிகழ்ச்சி மிகப் பயனுள்ளதாகவும் அடுத்து என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தபோது இந்நிகழ்வு மிக ஊக்கமாக அமைந்தது, இந்தத்துறையில் வெற்றி பெற்றவர்களை அழைத்து வந்து பேச வைத்தது நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
மதுரையில் நடக்கும் ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து UPSC / TNPSC – I ,II – இலவச பயிற்சி முகாமில் கலந்துகொள்ள இந்த விண்ணப்பத்தை பதிவு செய்யுங்க பாஸ்…