கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாகத் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல் `என்ஜாயி எஞ்சாமி’.
சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு, தீ இருவரது உருவாக்கத்தில் உருவான இப்பாடல் உலகமெங்கும் ட்ரெண்டாகி பிரபலமானது. இதையடுத்து ஆங்கில இதழ் ஒன்றில் இப்பாடல் பற்றிய கட்டுரையில் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ-யின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டு, அறிவின் பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் பாடலாசிரியர் அறிவு வருத்தப்பட, பலரும் அறிவுக்கு உரிய ‘கிரெடிட்ஸ்’ கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். அப்போது இயக்குநர் பா.இரஞ்சித் அறிவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துப் பேசியிருந்தார்.
2022ம் ஆண்டு சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டின் கலை நிகழ்ச்சியில் `என்ஜாயி எஞ்சாமி’ பாடப்பட்டபோது அறிவு பங்கேற்கவில்லை. ‘அழைப்பே விடுக்கவில்லை’ என்று அறிவும், ‘அழைப்பு விடுத்தோம், வரவில்லை’ என்று சந்தோஷ் நாராயணனும் இது குறித்து மாறி மாறி விளக்கமளித்தனர். அதுமட்டுமின்றி ச.நா., “இப்பாடல் உருவானது அனைவரது கூட்டு உழைப்பு, தனிப்பட்ட உழைப்பல்ல. இந்தப் பாடலின் அனைத்து வருமானத்தையும், உரிமைகளையும் தீ, அறிவு மற்றும் நான் என மூவரும் சமமாகப் பகிர்ந்து கொண்டோம். சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு எந்தவொரு பாரபட்சமின்றி கிரெடிட்ஸ் கொடுத்துள்ளேன்” என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் அறிவின் ‘வள்ளியம்மா பேராண்டி’ எனும் சுயாதீன ஆல்பத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பா.இரஞ்சித், டி.இமான், அந்தோணி தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் குறித்துப் பேசிய பா.இரஞ்சித், “அறிவின் ‘கள்ளமெளனி’ பாடல் வெற்றிப் பாடலாக அமைந்தது. அதற்குப் பிறகு ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் மிகப்பெரிய வெற்றிப் பாடலாக அமைந்தது. அதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது சந்தோஷ் நாராயணின் தயாரிப்பும், தீ பாடியதும்தான். அறிவின் எழுத்து மிகச் சாதாரணமான எழுத்தில்லை. பல தலைமுறைகளின் குரலை, வடிவத்தைக் கொண்டது. ஒரு பெரிய அரசியலை வார்த்தைகளாக மாற்றி, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொண்டு சென்றது அவரின் எழுத்து. அதற்குப் பின்னால் அவரின் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது.
ஆனால், ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலால் அறிவுக்கு நிறையப் பிரச்னைகள் வந்தன. மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டான். ரொம்ப எமோஷனாலானவன். எளிதில் உடைந்துவிடுவான். அதனால், அதிலிருந்து வெளியே வர பெரும் மனம்போராட்டாத்தை எதிர்கொண்டான். அவனது அந்தப் போராட்டத்திற்கான பதில்தான் இந்த ‘வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பத்தில் இருக்கும் 12 பாடல்களும்!” என்று பேசியிருக்கிறார்.