இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் `வாழை’. அவரின் தயாரிப்பு நிறுவனமான `Navvi Studios’-யின் முதல் திரைப்படம் இது.
இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனம் வெளியிடுகிறது. டிஜிட்டல் உரிமத்தை ‘Disney+ Hotstar’ வாங்கியுள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ பாடல் இன்று ஜூலை 18-ம் தேதி வெளியாகியிருக்கிறது. யுகபாரதியின் வரிகளில் தீ குரலில் மெல்லிசைப் பாடலாக உருவாகியிருக்கிறது இப்பாடல்.
இப்பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராம், பா.இரஞ்சித், ‘கூழாங்கல்’ இயக்குநர் வினோத்ராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழாவில் கலந்துகொண்ட அனைவரும் ‘வாழை’ திரைப்படம் குறித்துப் பேசியிருந்தனர். நீண்ட நாள்களாக சந்தித்துக்கொள்ளாத பா.இரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் இருவரும் இவ்விழாவில் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டது இந்த விழாவின் ஹைலைட்டாக அமைந்தது.
அப்போது இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்துப் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “தயாரிப்பாளர் கிடைக்காமல் என்கிட்ட வந்த மாரி செல்வராஜ், இப்போது ‘வாழை’ படத்தில் தயாரிப்பாளராகவே மாறியிருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். ‘வாழை’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கியிருக்கும் ‘Disney + Hotstar’க்கு நன்றி. இந்தக் காலகட்டத்தில் சின்னப் படங்களை டிஜிட்டலில் விற்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. நிறையத் தயாரிப்பாளர்கள் நல்ல படங்களை எடுத்துவிட்டு அதை டிஜிட்டலில் விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழல் மாற வேண்டும். நல்ல திரைப்படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடி தளத்திலும் நல்லபடியாக விற்பனையாகி, நல்ல வரவேற்பைப் பெற வேண்டும்.
‘வாழை’ திரைப்படம் சந்தோஷ் நாராயணன் இசையில் ரொம்ப நல்லா வந்திருக்கிறது. தீ சூப்பராகப் பாடியிருக்கிறார். ரொம்ப நாள்களுக்குப் பிறகு இந்த மேடையில்தான் சந்தோஷ் நாராயணனைச் சந்திக்கிறேன். அவரைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி எனக்குள். இவ்விழாவிற்கு வந்திருக்கும் இயக்குநர் வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. நானும் மாரிசெல்வாஜும் இணைந்துள்ள ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் நல்லபடியாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அதுவும் மாரி செல்வராஜின் முக்கியமான திரைப்படமாக இருக்கும்” என்று பேசியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து வந்து பேசிய இயக்குநர் ராம், “2018-ல இதே இடத்துலதான் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் நிகழ்வு நடந்துச்சு. அது ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கான மேடை. இப்போ அதே மேடையில நவ்வி ஸ்டுடியோஸ் உருவாகியிருக்கு. என்கூட ‘ஏழு கடல் ஏழு மலை’ தாண்டினது மாரிதான். முதன் முதல்ல ‘தங்க மீன்கள்’ படத்துக்கு லொகேஷன் தேடி நாகர்கோவில்ல இருக்கிற எல்லா மலைகளிலும் ஏறி இறங்கினோம். அவன்கூட மலை ஏறுவது ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கும். பள்ளத்தாக்கு அளவுக்குக் கதை இருக்கும். அவன் சொன்ன காதல் கதைகளைப் படமாக எடுத்துட்டே இருக்கலாம். அதுல தன்னுடைய பால்யத்துல இருந்த க்ரஷ்ஷை (Crush) எந்த கிரிஞ்சும் (Cringe) இல்லாம படம் பண்ணியிருக்கான். மாரி செல்வராஜ் எனக்குக் கிடைத்த துணைவன்.
அவன் இருக்கிற தைரியத்துல எந்த மலையில வேணாலும் ஏறலாம், இறங்கலாம். அதே மாதிரி ‘தங்க மீன்கள்’ படப்பிடிப்புக்காக வயநாடுல இருக்கக்கூடிய ஒரு மலைப் பகுதியில ஷூட்டிங் நடத்தினோம். அந்த நேரத்துல எங்களுக்குச் சாப்பாடு வரல. நான் கீழ இறங்கி பார்க்கப்போனேன். அப்போ என்னோட துணையாக மாரி செல்வராஜ் வந்தான். அவன் கருப்பியை கூட்டிட்டு அச்சன்கோவில் மலைல ஏறினதுல இருந்து மலை மேல ஏறிட்டே இருக்கான். அங்கிருக்கிற மலை முகடுகள்ல கொடியை நட்டுக்கிட்டே இருக்கான்.
மலையிலிருந்து மாரி செல்வராஜ் தன்னுடைய கருத்தை, அரசியலைப் பேசிக் கொண்டேதான் இருப்பான். அதை நாம் கேட்டுதான் ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம். சந்தோஷ் நாராயணன் எனக்கு ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்காக போன் பண்ணிப் பேசினாரு. இப்போ ‘வாழை’ படத்துக்காகவும் பயங்கரமா இருக்குனு போன் பண்ணிப் பேசினாரு. மாரியோட கதைகள்ல எனக்கு பிடிச்சதுல ‘வாழை’யும் ஒண்ணு” என்றார்.
இதன் பிறகு வந்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “ராம் சார் சொன்ன மாதிரி இதான் என்னுடைய முதல் மேடை! சினிமாவுக்கு வந்ததும் நான் முதல்ல எழுதின கதை ‘வாழை’தான். அதுக்கு பிறகு நிறைய படங்கள் பார்த்தேன், நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஒண்ணு புரிஞ்சுகிட்டேன். இந்தப் படத்தை கஷ்டப்பட்டு பண்ணக் கூடாது. இதை நல்லா பண்ணணும்னு நினைச்சேன்.
இந்த நிகழ்வு இந்தப் படத்துல நடிச்சிருக்கிற பசங்களுக்காகதான். அவங்கள இந்த மேடையில வந்து கூப்பிட்டு உட்கார வச்சிட்டேன். இனிமேல் இவங்க வழி தவறிப் போயிட மாட்டாங்க. இந்த கலையின் வழியாக அவங்க திசை மாற மாட்டாங்க, இந்த உலகத்தைப் புரிஞ்சுப்பாங்க. என்னுடைய ஊர்ல கலை நுழைய போகுதுங்கிற உணர்ச்சிதான் இப்போ எனக்கு பயங்கரமாக இருக்கு. அந்த வயசுல நான் மூர்க்கமாக இருந்தேன். நான் என்னுடைய கதைகள்ல இருந்து மீண்டு வர்றதுக்கு நேரம் எடுக்கும்.
அப்படியான கதைகளைத்தான் நான் தொடர்ந்து படமாகப் பண்றேன். ஒரு நாள் ‘பைசன்’ படத்தோட படப்பிடிப்புக்கு திலீப் சுப்புராயன் மாஸ்டர் வந்து ‘வாழை’ படத்தைப் போட்டுக்காட்ட சொன்னாரு. படம் பார்த்துட்டு எமோஷனலாகி, ‘இன்னைக்கு நான் ஷூட்டிங் பண்ணமாட்டேன். நீங்களே பண்ணிடுங்க’ணு சொன்னாரு. 2 மணி நேரம் கழிச்சு வந்து நான் இந்தப் படத்துல இருக்கணும்னு சொன்னாரு. அவர் அதைச் சொல்லும்போது அவர் கண்ணு கலங்கியிருந்துச்சு. அதுக்குப் பிறகு அவரோட தயாரிப்பு நிறுவனம் மூலமா எனக்கு இப்போ உறுதுணையாக இருக்காரு. இந்த படம் ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியாகுது!” என்றார்.