கும்லா (ஜார்க்கண்ட்): நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி தாம் ஒருபோதும் கவலைப்படவில்லை என்றும், ஏனெனில் அதற்காக பலரும் இணைந்து வேலை செய்கிறார்கள் என்றும், இது பலன்களைக் கொடுக்கும் என்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள பிஷூன்பூரில் விகாஸ் பாரதி என்ற தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கிராம அளவிலான தொழிலாளர்கள் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரையாற்றினார்.
அப்போது அவர், “நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. ஏனெனில், நாட்டின் முன்னேற்றத்துக்காக பலரும் இணைந்து வேலை செய்கிறார்கள். இந்திய மக்கள் தங்கள் சொந்த இயல்புகளைக் கொண்டுள்ளனர். பலர் எந்தப் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் நாட்டின் நலனுக்காக பாடுபடுகிறார்கள். இது பலன்களைக் கொடுக்கும்.
நம்மிடம் 33 கோடி கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் இருப்பதால் நாம் வெவ்வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்டுள்ளோம். நமது நாட்டில் 3,800 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. உணவுப் பழக்கங்கள் கூட வேறுபட்டவை. வித்தியாசம் இருந்தாலும், நம் மனம் ஒன்றுதான். மற்ற நாடுகளில் இதைக் காண முடியாது.
சமூகத்துக்குத் திரும்பக் கொடுப்பது என்பது இந்திய கலாசாரத்தில் வேரூன்றி இருக்கும் ஒன்று என்பதை முற்போக்காளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தற்போது நம்புகிறார்கள். இது வேதங்களில் எங்கும் எழுதப்படவில்லை. ஆனால் தலைமுறை தலைமுறையாக அது நம் இயல்பில் உள்ளது. கிராமப் பணியாளர்கள் சமுதாய நலனுக்காக அயராது உழைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.