அமெரிக்காவில் விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவி – கேலி பேசிய போலீஸ்காரர் பணிநீக்கம்

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டூலா (வயது 23) என்ற மாணவி முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஜானவி கண்டூலா சாலையை கடக்கும்போது வேகமாக வந்த போலீஸ் ரோந்து வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த வாகனத்தை கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டினார். அவருடன் டேனியல் ஆடரெர் என்ற மற்றொரு போலீஸ் அதிகாரியும் இருந்தார். விபத்துக்கு பின் சியாட்டில் போலீஸ் சங்க தலைவரை தொலைபேசியில் அழைத்த அதிகாரி டேனியல் இது குறித்து அவரிடம் தகவல் தெரிவித்தார். அப்போது மாணவி குறித்தும் அந்த விபத்து குறித்தும் கேலியாக பேசி அவர் சிரித்துள்ளார்.

இந்த உரையாடல் போலீஸ் அதிகாரி டேனியலின் உடம்பில் இருந்த கேமராவில் பதிவான நிலையில், அந்த ‘ஆடியோ’ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விபத்து ஏற்படுத்தியது மட்டுமின்றி, கேலியாக பேசிய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய வம்சாவளி எம்.பி.,க்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விபத்து குறித்து சியாட்டில் போலீஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு விளக்கமளித்த டேனியல், ‘நகைச்சுவையாக தனிப்பட்ட முறையில் பேசிய விவகாரம், கேமராவில் பதிவு செய்யப்படவில்லை என நம்பினேன். என் கடமைக்கும், நான் பேசியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்திய மாணவி விபத்தில் உயிரிழந்த பிறகு கேலி பேசிய போலீஸ் அதிகாரி டேனியல் ஆடரெர் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சியாட்டில் நகர காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “டேனியல் ஆடரெரின் வார்த்தைகளால் ஜானவி கண்டூலாவின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன உளைச்சலை யாராலும் அழிக்க முடியாது. அவர் இனியும் பணியில் நீடிப்பது சியாட்டில் நகர காவல்துறைக்கு அவமதிப்பை ஏற்படுத்தும். அவர் தனது செயல்களால் காவல் பணிக்கு களங்கம் விளைவித்துள்ளார். எனவே டேனியல் ஆடரெர் சியாட்டில் நகர காவல்துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.