வாகனங்களின் முன் கண்ணாடியில் 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் ஒட்டாவிட்டால் 2 மடங்கு கட்டணம்

புதுடெல்லி,

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், ‘பாஸ்டேக்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆனால் சிலர் சுங்க கட்டணத்தை தவிர்க்கும் நோக்கில் வேண்டுமென்றே பாஸ்டேக் ஸ்டிக்கரை வாகனத்தின் முன் கண்ணாடியில் வைக்கமால் இருப்பதாக தெரிகிறது. இதனால் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு தொடர்ந்து பல புகார்கள் வந்தன.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக புதிய வழிகாட்டுதலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி முன் கண்ணாடியில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் ஒட்டாமல் வரும் வாகனங்களின் பயனர்களிடம் இருந்து 2 மடங்கு கட்டணத்தை வசூலிக்க சுங்கச் சாவடிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடியின் முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து சுங்க சாவடிகளிலும் அறிவிப்பு பலகையில் தகவல் எழுதி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாமல் வரும் வாகனங்களின் பதிவு எண்களை சுங்க சாவடிகளில் பதிவு செய்திருக்க வேண்டும். இதன்மூலம் இரு மடங்கு கட்டண வசூல் மற்றும் சுங்க சாவடியில் வாகன வரிசையில் குறிப்பிட்ட வாகனம் வந்ததற்கான அத்தாட்சியாக அது இருக்கும் என கூறப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.