சசிகலா சுற்றுப்பயணமும், எடப்பாடியின் சாஃப்ட் கார்னரும்(?)… என்ன நடக்கிறது அதிமுக முகாமில்?!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி சந்தித்த இரண்டாவது தேர்தல். அதில், 7 தொகுதிகளில் டெப்பாசிட் இழந்து இருக்கிறது. சில இடங்களில் மூன்றாம், நான்காம் இடங்களுக்கும் அதிமுக தள்ளப்பட்டு இருப்பது, தலைமை மீதான விமர்சன பார்வையை உருவாக்கியதோடு, ‘இணைப்பு மட்டுமே அதிமுகவை மீழசெய்யும்’ என்ற பழைய புயலை மீண்டும் மையம் கொள்ளவைத்து புழுதியை கிளப்பி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், சில புள்ளிவிவரங்களை காட்டி, ‘2019 நாடாளுமன்றத் தேர்தலைவிட 2024-ல் வாக்கு சதவிகிதம் உயர்ந்து இருக்கிறது. எனவே, இன்னும் வேகமாக செயல்பட்டால், 2026-ல் ஆட்சியை பிடித்துவிடலாம்’ என்று எடப்பாடி கட்சி நிர்வாகிகளிடம் பேசி வருகிறார்.

இந்நிலையில்தான், நத்தம் விசுவநாதன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், வேலுமணி, கே.பி.அன்பழகன், தங்கமணி ஆகிய ஆறு முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியை கடந்த ஜூலை 8-ம் தேதி சேலம் இல்லத்தில் வைத்து இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை செய்தனர்.

ஆனால், இணைப்புக்கு சாத்தியமில்லை என்று எடப்பாடி உறுதியாக மறுத்துவிட்டார். இதுஒருபுறமிருக்க, சசிகலா கட்சியை இணைக்கபோவதாக சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம்.

“அம்மா மறைவுக்கு பிறகு, சசிகலா, தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நான்கரை கால ஆட்சியை நிதானமாக இருந்து முடித்த எடப்பாடி, ஓ.பி.எஸ்-ஸின் நெருக்கடி அதிகரிக்கவே, அவரை கட்சியில் இருந்து தூக்கினார்.

எடப்பாடி பழனிசாமி

அதன்படி, கட்சியின் 95 சதவிகித நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தனர், இருக்கின்றனர். வெறும் ஐந்து சதவிகித நபர்கள்தான், கட்சியில் இருந்து விலகி நிற்கிறார்கள். எடப்பாடியின் ஒற்றை தலைமையின் கீழ், முதன்முதலாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை கட்சி சந்தித்தது. ‘இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் பலத்தைக் காட்டும்’ என்பதால், அந்தத் தோல்வி கட்சிக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கட்சி அடைந்த தோல்வியை சுலபமாக கடந்துபோய்விட முடியவில்லை.

இதுதான் கட்சியில் இணைப்பு குறித்து பேச்சு கட்சிக்குள் எழுந்து இருப்பதற்கு முக்கிய காரணம். ’கட்சிக்குள் ஏற்படும் பிரச்னைக்கு சசிகலா நீக்கம் தான் தொடக்க புள்ளி. அவரை சாந்தப்படுத்தினால், தேர்தலில் தோற்றுப் போய் இருக்கும் தினகரன், ஓ.பி.எஸ் காணாமல் போய்விடுவார்கள் என்று எடப்பாடி நம்புகிறார். அதன்படிதான், சமீபத்தில் தினகரன், ஓ.பி.எஸ் வகையறாக்களை சாடிய எடப்பாடி, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது சசிகலா வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி ‘ மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வர எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, ஜானகி செயல்பட்டதுபோன்று, சசிகலா செயல்படவேண்டும்.” என்றிருக்கிறார்.

சசிகலா

சசிகலா விஷயத்தில் இதற்கு முன்பாக இதுபோன்ற ஒரு தெளிவுடன் எடப்பாடி இல்லை. ஆனால், இணைப்பு குறித்து சீனியர்கள் ஆறுபேரும் எடப்பாடியை சந்தித்து பேசி இருக்கின்றனர். இதுதான் வாய்ப்பு என்று சசிகலாவும் களத்தில் இறங்கி இருக்கிறார். தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணமும் செய்யவிருப்பதாக சொல்கிறார். இது எடப்பாடிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இதை அமைதியாக இருந்தே கடக்க முடிவெடுத்து இருக்கிறார் எடப்பாடி.

இந்த சம்பவங்களுக்கு கவுன்டர் அட்டாக் கொடுத்தால், அதுவே செய்தியாகி, பிரச்னையை வீரியமாக்க வாய்ப்பு இருக்கிறது. ‘புறக்கணிப்புதான் ஒருவருக்கு நாம் கொடுக்கும் தண்டனை’ என்ற முடிவில்தான், சசிகலா விவகாரத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். ஆனால் வெளியே அது இணைப்புக்கான சாஃப்ட் கார்னர்போல தோற்றம் ஏற்பட்டுவிட்டது. எனவேதான், ஆர்.பி.உதயகுமாரை வைத்து சசிகலாவை சாடி இருக்கிறார் எடப்பாடி. `கறந்த பால் மீண்டும் மடி புகாது’ என உதயகுமாரை வைத்து சசிகலா இணைப்புக்கு வாய்ப்பில்லை என தெளிவுப்படுத்தியுள்ளார். எப்படி இருந்தாலும், தேர்தல் வரை இணைப்பு தலைவலி எடப்பாடியை விடாது துரத்தும் என்றே தெரிகிறது.” என்றனர் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.