ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய அணி அதன் பிறகு அடுத்த 4 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
முன்னதாக அந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் அசத்தலாக விளையாடிய ஷிவம் துபே பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு அசத்திய அவர் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆனால் அந்த விருதுக்காக தமக்கு கிடைத்த பரிசுத்தொகையை அவர் அப்படியே போட்டி நடைபெற்ற ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதான பராமரிப்பாளர்களுக்கு கொடுத்தார்.
குறிப்பாக ஆட்டநாயகன் விருது வென்றதற்காக 500 டாலர்களை ஷிவம் துபே பரிசாக பெற்றார். அந்த பரிசை அப்படியே மைதான பராமரிப்பாளர்களுக்கு அவர் கொடுத்தது நெஞ்சங்களை தொடும் விதமாக அமைந்தது.
இந்நிலையில் அந்தத் தொடரின் 5 போட்டிகளையும் மிகச்சிறப்பாக நடத்த உதவிய மைதான பராமரிப்பாளர்களின் உழைப்பை பாராட்டும் வகையில் தம்முடைய பரிசை கொடுத்ததாக ஷிவம் துபே விளக்கம் அளித்துள்ளார். –
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ஜிம்பாப்வேவில் இருக்கும் மைதான பராமரிப்பாளர்கள் சிறப்பாக வேலை செய்தனர். நாங்கள் விளையாடுவதற்கு தகுந்த சூழ்நிலைகளை அவர்கள் உருவாக்கிக் கொடுத்தனர். இருப்பினும் அவர்களுடைய கடின உழைப்பு அடிக்கடி கவனிக்கப்படாமல் செல்கிறது. எனவே அவர்களுடைய முயற்சிக்கு நான் பாராட்டு தெரிவிக்க விரும்பினேன். என்னுடைய ஆட்டநாயகன் விருதுக்காக கிடைத்த பணத்தை கொடுத்ததன் வாயிலாக அவர்களுடைய பங்கிற்கு ஒரு சிறிய வழியில் ஆதரவு கொடுத்தேன் என்று நம்புகிறேன். அவர்களுடைய கடின உழைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நான் நம்பினேன்” என கூறினார்.