Jump Cuts: `இன்னைக்குப் போட்டி அதிகமாகவே இருக்கு!'- சினிமாவில் அறிமுகமாகும் ஹரி பாஸ்கர்

யூடியூப் தமிழகத்தில் கவனம் பெறத் தொடங்கிய நேரத்தில் புதுவடிவிலான ஸ்கிட் வீடியோ என்ற முயற்சியைக் கையில் எடுத்து பலரையும் ரசிக்க வைத்தவர், ‘Jump Cuts’ ஹரி பாஸ்கர்.

ஒவ்வொரு கான்சப்ட் வீடியோவிலும் பல கதாபாத்திரங்களில் இந்த ஒற்றை நபரே நடித்துத் தூள் கிளப்புவார். தன்னுடைய நீண்ட யூடியூப் பயணத்துக்குப் பிறகு தற்போது சினிமாவில் தடம் பதிக்கிறார். 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ என்ற திரைப்படத்தில் கதாநாயனாக நடிக்கிறார் ஹரி பாஸ்கர். இவரை தொடர்புக் கொண்டு திரைப்படத்திற்கு வாழ்த்துகளைக் கூறி உரையாடலைத் தொடங்கினோம்.

பேசத் தொடங்கிய ஹரி பாஸ்கர், “யூடியூப் வீடியோஸ் பண்ணின சமயத்திலேயே சினிமாவுல வாய்ப்புகளுக்காக முயற்சி பண்ணிகிட்டு இருந்தேன். இதே மாதிரி தொடர்ந்து சில வருஷங்களுக்கு முயற்சி பண்ணேன். அந்த முயற்சிக்குப் பலனாக இப்போ இந்த ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ படத்தோட வாய்ப்பு கிடைச்சிருக்கு. இந்த படத்துக்காக நான் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிமிஸுக்குதான் முதல்ல நன்றி சொல்லணும். ஒரு புதுமுக நடிகருக்கு இந்த விஷயமெல்லாம் சரியாக கிளிக்காகி ஹிட்டடிக்கும்னு அவங்க நம்பிக்கை வச்சிருக்காங்க. இந்த படத்தோட இயக்குநர் அருண் ரவிசந்திரன் இயக்குநர் பி. வாசுகிட்ட உதவி இயக்குநராக வேலை பார்த்தவர். இந்த இயக்குநரும் நானும் சேர்ந்து இதுக்கு முன்னாடியே வேலை பார்த்திருக்கோம். நானும் அவரும் சேர்ந்து யூடியூப்காக ஒரு வெப் சீரிஸ் பண்ணோம்.

Mr Housekeeping Poster

அந்த வெப் சீரிஸ் பண்ணும்போது அதோட கதை ஒரு திரைப்படத்துக்கான மெட்டீரியல்னு தெரிஞ்சு வெப் சீரிஸை நிறுத்திட்டு படமாக பண்றதுக்கு முடிவு பண்ணோம். வெப் சீரிஸுக்காக எடுத்த புட்டேஜஸ் வச்சு திரைப்படத்துக்காக `Show reel’ பண்ணினோம்.” என்றவர், ‘ஜம்ப் கட்ஸ்’ வீடியோஸுக்கு கிடைச்ச வரவேற்புக்குப் பிறகு எனக்கு வந்த வாய்ப்புகள் என்னை ரொம்பவே சந்தோஷப்படுத்துச்சு. சரியான இடத்துல அறிமுகமானா நல்லா இருக்கும்னு பொறுமையாக இருந்து அதுக்கான முயற்சிகள்ல தொடர்ந்து ஈடுபட்டோம். ஒரு சமயத்துல தனியாகவே ப்ராஜெக்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணி அதுக்கான வேலைகளிலும் தொடர்ந்து சில வருஷம் ஈடுபட்டோம். ” என்றார்.

மேலும் பேசிய அவர், “யூடியூப்ல இருந்து சினிமாவுக்கு வரும்போது சில செயல்கள்ல கவனமாக இருக்கணும்னு முடிவு பண்ணியிருந்தேன். யூடியூப்ல நம்ம தினமும் ஒவ்வொரு கண்டென்ட் பண்ணுவோம். ஆனா, சினிமா அப்படி கிடையாது. சினிமாங்கிறது ஒரு கிராஃப்ட். இதையும் யூடியூபையும் கலந்திடக்கூடாதுனு நினைக்கிறேன்.” என்றவர் தற்போதைய யூட்யூப் நிலை குறித்தும் விவரிக்க தொடங்கினார். அவர், “யூடியூப் நல்ல ஒரு பிளாட்பார்ம். முன்னாடிலாம் யூடியூப்ல கண்டென்ட் வச்ச ஸ்கிட் வீடியோஸ் பண்றவங்க ரொம்பவே குறைவு.

Hari Baskar

ஆனா, இன்னைக்கு அப்படி இல்ல. போட்டி அதிகமாகவே இருக்கு. இன்னைக்கு இந்த காலத்துல பலரும் இன்ஃப்ளூயன்ஸராக இருக்காங்க. இப்போ புதுசா கண்டன்ட் வீடியோஸ் பண்ணி அடையாளப்படுத்தப்படுறது கொஞ்சம் கஷ்டம். ஆனா, இப்படியான வீடியோவைத் தாண்டி பைலட் ஃபிலிம், ஷார்ட் ஃபிலிம் மாதிரி எடுத்தா அதை தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ பார்ப்பாங்க.

அவங்க பார்வைக்குப் போகும்போது நமக்கு வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த காலத்துல ஒரு வீடியோவுக்கு எத்தனை பேர் பார்க்கிறாங்கங்கிற வியூஸ் முக்கியமில்லனு நினைக்கிறேன். ஒருத்தரோட விடியோஸுக்கு வியூஸ் அதிகமாக இருக்கிறதால அவரை நடிகர்னு சொல்லிட முடியாது. மற்றொருவருடைய வீடியோவுக்கு வியூஸ் குறைவாக இருக்கிறதால அவருக்கு திறமை இல்லைனு சொல்லிட முடியாது.” என்றார். இறுதியாக அவருடைய ஜம்ப்கட்ஸ் டீம் தற்போது என்ன செய்கிறார்கள்? என்ற கேள்வியை எழுப்பினோம்

Mr Housekeeping Poster

அவர், “இப்போ நான் நடிப்பின் பக்கம் முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். அதே மாதிரி என்னுடைய ஜம்ப்கட்ஸ் டீமும் இப்போ டைரக்‌ஷன் பக்கம் முயற்சி பண்ணிகிட்டு இருக்காங்க. யூடியூப்ல இந்த காலத்துக்கேத்த மாதிரியான டிரண்ட்ல கான்சப்ட் வீடியோ பண்றதுக்கும் திட்டமிட்டுறாங்க. இப்போ ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ வரட்டும் சீக்கிரமா சந்திப்போம்!” என முடித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.