‘இதுக்கெல்லாமா சட்டம்‘ என்று கேட்டவுடனே நமக்கு குபீர் சிரிப்புத்தான் வருகிறது. ஆனால், இன்றைய நவீன வாழ்க்கை எந்தளவு இறுக்கமாகவும், மகிழ்ச்சி இல்லாமலும் வறட்சியாக நகர்கிறது என்பதற்கான உதாரணமாக இதைப் புரிந்துகொள்ளலாம்.
ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ளது யமகட்டா மாகாணம். இங்கு ஆட்சி செய்யும் லிபரல் டெமாக்ரட்டிக் பார்ட்டிதான் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தப் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. ‘தினமும் சிரிப்பது உடல்நலம், மனநலம் இரண்டையும் மேம்படுத்தும். மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது‘ என இதுகுறித்து அரசு விளக்கமளித்துள்ளது.
மேலும், இந்தப் புதிய சட்டம் பற்றிய அரசின் செய்திக்குறிப்பு தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பணிச்சூழலை மகிழ்ச்சிகரமாக சிரிக்கும் வகையில் அமைக்க வேண்டுமென்றும் தொழிலதிபர்களிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சரி… இப்படி ஒரு திடீர் சட்டம் அமலுக்கு வர என்ன காரணம்?
யமகட்டா பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மேற்கொண்ட ஆராய்ச்சியின் எதிரொலியாகவே இந்த முன்னெடுப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் சுமார் 17,152 பேரிடம் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 40 வயதுடையோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். குறைவாக சிரிப்பவர்கள் அல்லது சிரிக்காமலேயே இருக்கும் சீரியஸ் ஆசாமிகளுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் அதிகம் வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். சிரிப்பில்லாத வாழ்க்கை உயிரிழப்பு போன்ற அபாயங்களுடனும் தொடர்பு கொண்டது என ஆய்வின் முடிவில் தெரிய வந்தது. இந்த ஆய்வுக்கட்டுரை Journal of Epidemiology இதழிலும் வெளியானது.
இந்த ஆய்வின் அடிப்படையிலேயே நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நலன் கருதி புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
‘சிரிப்பது வாழ்க்கையை அனுபவிப்பதற்கும், நேர்மறையான எண்ணங்களுக்கும், செயல்திறனை வளர்ப்பதற்கும், அமைதி, நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, மனசாட்சியுடன் வாழ்வதற்கும் உதவி செய்யும்‘ என்றும் கூறுகிறது புதிய சட்டம். இந்தச் சிரிப்பு சட்டம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க, ஒவ்வொரு மாதத்தின் 8-ம் நாளானது சிரிப்பின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யமகட்டா அரசின் இந்தச் சட்டமானது எதிர்க்கட்சியினர் மற்றும் சில சமூக ஆர்வலர்களால் கடும் விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளாகியிருக்கிறது. ‘சிரிப்பதும், சிரிக்காமல் இருப்பதும் ஒரு மனிதனின் தனிப்பட்ட உரிமை. இந்தச் சட்டம் தனி மனிதனின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. எல்லோருக்கும் சிரிக்கும் சூழ்நிலை இருக்காது. சிலர் தனிப்பட்ட வாழ்வில் ஏதேனும் துக்க மனநிலையில் இருப்பார்கள். வேலை பளு இருக்கும். உடல்நிலை சரியில்லாமல் இருப்பார்கள். அவர்களிடம் எல்லாம் சென்று ஏன் சிரிக்கவில்லை என்று கேட்க முடியாது‘ என்று கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.
இதன் எதிரொலியாக சிரிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் வதந்தி பரவியது. ஆனால், அப்படியெல்லாம் இல்லை. பொதுமக்களிடம் சிரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். அபராதமெல்லாம் விதிக்கப்படாது என்றும் உள்ளூர் அரசு நிர்வாகத்தினர் சந்தேகம் கேட்ட பொதுமக்களிடம் விளக்கமளித்துள்ளனர்.
ஜப்பானில் அமலுக்கு வந்த இந்தச் சட்டம் விநோதமாக இருந்தாலும், எதிர்ப்பினை சந்தித்தாலும் பொதுமக்களிடையே சிரிப்பு பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் என்பதால் இது வரவேற்க வேண்டியதே. இதைத்தான் ‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்‘ என்று எந்த ஆராய்ச்சியும் செய்யாலமேயே நம் ஊரில் பழமொழியாக முன்பே சொல்லி வைத்தார்கள்!
ஜப்பானின் சில விநோதமான சட்டங்கள்…
ஜப்பானில் இதுபோன்ற விநோதமான சட்டம் அமலுக்கு வருவது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே சில சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
* ஜப்பானின் ரூபாய் நோட்டை சேதப்படுத்துவது ஓர் ஆண்டு வரை சிறைத்தண்டை அளிப்பதற்கேற்ற தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.
* வீட்டிலுள்ள குப்பையை அதற்குரிய நாளில்தான் வெளியில் எடுத்து வர வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.
* ஒரு சதவிகிதத்துக்கும் மேல் ஆல்கஹால் கொண்ட மதுபானத்தை விற்பனை செய்வது சட்ட விரோதம். மீறினால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
* கடந்த 1948-ம் ஆண்டு முதல் இரவுவிடுதிகளிலும், பார்களிலும் நடனமாடுவது குற்றமாகவே இருந்தது. நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு 2014-ம் ஆண்டுதான் அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
* டாட்டூ குத்துகிறவர்கள் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று அரசு கருதியது. இதனால் வெளியில் தெரியும் வகையில் டாட்டூ போட்டுக் கொண்டு வருகிறவர்களுக்குப் பொது இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.