இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோதாவரி ஆற்றின் கரையோரத்தில் ராமகுண்டம் எனும் இடத்தில் நவீன தொழில்நுட்பத்தில் கூட்டில் மீன்வளர்க்கும் முறைமையை பார்வையிட்டார்.
இந்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய அவ்விடத்திற்குச் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. மீன் குஞ்சுகள் பெருக்கம், அறுவடையில் ஏற்படக்கூடிய சவால்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனிடையே ஆந்திரா மாநிலத்தின் ராமகுண்டம் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு தொட்டிகளில் மீன் வளர்க்கும் முறைமையையும் , அத்தொட்டிகளின் மேலாக சோலார் மின் உற்பத்தித் தொழில்நுட்பம் ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் திட்டத்தையும் பார்வையிட்டார்.
இதுபோன்று இரண்டு வகையான திட்டங்களை வெற்றிகரமாக இலங்கை பண்ணையாளரகளுக்கும் ஊக்குவிப்புச் செய்வதன் ஊடாக பண்ணையாளர்கள் கூடுதல் நன்மையை அடைவார்கள் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை ஆந்திரா மாநிலத்தில் இராஜமந்திரி எனும் இடத்தில் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இறால் இனப்பெருக்க நிலையம் , அதன் தொழில்நுட்பம் ஆகியவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.
குறித்த தொழில்நுட்பத்தின் ஊடாக ஆரோக்கியமான இறால் குஞ்சுகளைப் பெருக்கம் செய்து இறால் பண்ணையாளர்களுக்கு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்புபட்ட அதிகாரிகளுடனும் அமைச்சர் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.