“கன்னடர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவருவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது” – சசி தரூர் விமர்சனம்

புதுடெல்லி: தனியார் துறையில் கன்னடர்களுக்கு வேலை இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் நோக்கம் கொண்ட மசோதா என்பது அரசியலமைப்புக்கு விரோதமானது, விவேகமற்றது என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவில் கன்னடர்களுக்கு தனியார் நிறுவனங்கள் வேலை வழங்குவதை கட்டாயப்படுத்தும் நோக்கம் கொண்ட மசோதா குறித்த கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி சசி தரூர், “இது புத்திசாலித்தனமான முடிவு அல்ல. ஒவ்வொரு மாநிலமும் இதுபோன்று சட்டத்தை கொண்டுவந்தால் என்னாகும்? இது அரசியலமைப்புக்கு விரோதமானது. அரசியலமைப்பின் படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக வாழவும், வேலை செய்யவும், பயணம் செய்யவும் உரிமை உண்டு. எனினும், மசோதாவை நிறுத்தி வைத்த சித்தராமையா தலைமையிலான அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கர்நாடகா ஏன் நினைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற சட்டம் அமல்படுத்தப்பட்டால், கர்நாடகாவில் இருந்து வணிகங்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துவிடும். இதேபோன்ற மசோதாவை ஹரியாணா அரசு அறிமுகப்படுத்த முயன்றபோது, உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்தது” என்று தெரிவித்தார்.



முன்னதாக, “தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கர்நாடக மாநில வேலைவாய்ப்பு மசோதா, 2024” என்ற பெயரிலான மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை கடந்த ஒப்புதல் அளித்தது. தொழில்நுட்ப நிறுவனமான NASSCOM-ன் எச்சரிக்கை உட்பட, தொழில் துறையினரின் விமர்சனங்களைத் தொடர்ந்து மாநில அரசு, அந்த மசோதாவை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.