“தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்போகிறது ஆளும் தி.மு.க..!”
கடந்த சில நாள்களாக அரசியல் களத்தில் இதுதான் ஹாட் டாப்பிக். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “நாற்பதுக்கு நாற்பது தொகுதியிலும் வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றி பெறவில்லையென்றால் அமைச்சர், மாவட்டச் செயலாளர் என எந்தப் பதவியும் நிலைக்காது. அது சீனியர்களாக இருந்தாலும் சரி. தோல்வி அடைந்தால் அவர்களது பதவி இருக்காது” என எச்சரித்தே தேர்தலைச் சந்தித்தது தி.மு.க.
தேர்தலில் அவர்கள் நினைத்ததைப்போலவே வெற்றியும் கிடைத்தது. ஆனாலும் அமைச்சரவை மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் இருக்கும் எனக் கிசுகிசுக்கப்பட்டது. அதையடுத்து உடனடியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாக, தேர்தல் முடிந்த பிறகு இந்த மாற்றம் இருக்கும் எனச் சொல்லப்பட்டது. தற்போது இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்றாகிவிட்டது. இப்போது அமைச்சரவை மாற்றம், மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் குறித்து தீவிரமாகவே பேச்சு எழுந்து வருகிறது. இந்த எல்லாச் சூழலிலும் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என்ற பேச்சும் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால், சமீபத்தில் தேதி குறிப்பிட்டு, உதயநிதி பதவியேற்கப் போகிறார் என்ற பேச்சு எழுந்து அரசியல் களத்தில் அனலைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடக்கப் போகிறதா? உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கப் போகிறார்களா என்ற விசாரணையோடு அறிவாலயத்தை வலம் வந்தோம்…
“அமைச்சரவை மாற்றம் உறுதி. ஆனால், உதயநிதி துணை முதல்வர் ஆவாரா இல்லையா என்பதை இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது” எனப் பேச்சைத் தொடங்கினார் சீனியர் அமைச்சர் ஒருவர்.
“அமைச்சரவை மாற்றம் என்பது நீண்டகாலமாகவே உள்ளுக்குள் விவாதிக்கப்பட்டு, முதல்வரிடம் அது தொடர்பாக ஆலோசனையும் நடந்தது. அப்போது, ஒட்டுமொத்த அமைச்சரவையையும் மாற்ற வேண்டும் எனவும் சிக்கலுக்குரியவர்களை மட்டும் மாற்றினால் போதும் எனவும் பேசப்பட்டது. அதையடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்ததால் தற்காலிகமாக அந்தப் பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு ரிப்போர்ட் கார்டு ஒன்றைத் தயாரித்து முதல்வரிடம் சமர்ப்பித்திருக்கிறது ‘பென்’ கம்பெனி. அதையொட்டி, அமைச்சரவை மாற்றம் இருக்கும்” என்றவர்…
“அமைச்சரவையில் புதிதாக யாரையும் நுழைக்கவோ, எடுக்கவோ மாட்டார்கள். சிறியளவில் மாற்றம் மட்டுமே இருக்கும் என்கிறார்கள். அதற்குள்ளாகவே அமைச்சரவையில் இடம் பிடிக்க பலரும் தங்களுக்கு நெருக்கமான வழிகளில் தலைமையை முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.” என்றார்.
மேலும் தொடர்ந்தவர், “துணை முதல்வர் பதவியைப் பொறுத்தவரை அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க இப்போதைக்குத் தலைமைக்கு விருப்பமில்லை. ஆனால், அமைச்சர்கள் முதல்வரிடமும் அதிகாரிகள் உதயநிதியிடமும் ரிப்போர்ட் செய்யலாம் எனச் சொல்லப்பட்டதாலேயே தலைமை அது குறித்த ஆலோசனைக்கே வந்தது. அதுவரை 2026 தேர்தலில் வெற்றிபெற்றால்தான் உதயநிதியை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என்ற எண்ணம்தான் தலைமைக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் தலைமையே உதயநிதியிடம் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளச் சொல்லி, கேட்க, இப்போதைக்கு அதை ஏற்றால் விமர்சனம் வருமோ எனத் தயங்கியதாகச் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, இப்போது வரை உதயநிதியைத் துணை முதல்வர் ஆக்கினால் எந்தத் துறையை ஒதுக்குவது என்றோ எப்போது துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்றோ முடிவு செய்யப்படவில்லை.” என்றவர்,
“முதல்வர் விரைவில் வெளிநாடு செல்லவுள்ளார்.எனவே, அதற்குள் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். ஆடி மாதத்தில் எந்த அறிவிப்பும் வெளியிட மேலிடத்தில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே, இப்போதைக்கு அறிவிப்பு வராது என்கிறார்கள். உங்களைப் போலவே நாங்கள் அந்த அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம்” என முடித்துக்கொண்டார்..!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88