பா. இரஞ்சித் இயக்கியிருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் `மினிக்கி மினிக்கி’ என்ற பாடல் அண்மையில் வெளியாகி வரவேற்பையும் பெற்றிருந்தது.
இந்தப் பாடலை பாடியவர் பாடகி சிந்தூரி விஷால். ‘சீதா ராமம்’ போன்ற திரைப்படங்களின் இசையமைப்பாளரான விஷால் சந்திரசேகரின் மனைவிதான் இந்த சிந்தூரி. பாடலுக்கு வாழ்த்துக்களைக் கூறி கேள்விகளை அடுக்கினோம்.
‘மினிக்கி மினிக்கி’ பாடலுக்கான வேலைகள் எப்போ, எப்படி தொடங்குச்சு?
ஒரு நாள் ஜி.வி பிரகாஷ் சார் ஸ்டூடியோவுல இருந்து போன் வந்தது. அப்போ என்கிட்ட ஒரு டிராக் பாட சொன்னாங்க. அவருமே பாடல் வரிகளைப் பாடிக் காமிச்சாரு. அந்த பாடல் வரிகளும் பழங்குடி மக்களோட மொழி நடையில இருக்கணும்னு சொன்னாங்க. இதையும் தாண்டி நல்லவொரு ஃபோக் பாடலுக்கான எனர்ஜியோட இருக்கணும்னு சொன்னாங்க. குறிப்பாக இந்தப் பாடல்ல ‘மினிக்கி மினிக்கி’ லைன் ரொம்பவே நல்லா இருந்தது. எனக்கும் பிடிச்சிருந்தது. ஆச்சரியம் என்னனா… இந்தப் பாடலை நான் பாடும்போதும் இது ‘தங்லான்’ படத்துக்காகனு எனக்குத் தெரியாது. போன மாசம் என்னைக் கூப்பிட்டு மற்ற மொழிகள்லயும் இந்தப் பாடலை பாடச் சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான் மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள்லயும் இந்தப் பாட்டை நான் பாடினேன். இந்த நேரத்துலதான் நான் தங்கலான் படத்துக்காகப் பாடப்போறேன்னு தெரிஞ்சு ரொம்பவே சந்தோஷப்பட்டேன். என் குரல்ல ஐந்து மொழிகள்ல இந்தப் பாடல் வந்தது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்குது.
5 மொழிகள்ல பாடினது எந்தளவுக்குச் சவாலாக இருந்துச்சு?
நான் இதுக்கு முன்னாடியே பல மொழிகள்ல பாடியிருக்கேன். என்னுடைய குடும்பம் பாலக்காடு பின்னணியைச் சேர்ந்தவங்க. அதுனால எனக்கு மலையாள உச்சரிப்பு தெரியும். இப்படியான விஷயங்களைத் தாண்டி நான் ஒரு கர்னாடிக் மியூஸிசியன். அதன் மூலமாக தெலுங்கு, கன்னடத்திலேயும் பாடியிருக்கேன். எனக்கும் அந்த மொழிகள் மேல ஓர் ஆர்வம் இருக்கு. அந்த மொழிகள்ல பேசமாட்டேன். ஆனா, பாடுவேன். இந்தப் பாடலை 5 மொழிகள்ல பாடின விஷயம் சவால்தான். நான் அந்த சவாலை லவ் பண்ணி பண்ணினேன்.
இந்தப் பாட்டுக்கு இயக்குநர் பா. இரஞ்சித் என்ன சொன்னாரு?
பாட்டு வந்ததும் நான் ஜி.வி சாருக்கும், ரஞ்சித் சாருக்கும் மெசேஜ் பண்ணினேன். என்னுடைய கரியரில் ஒரு முக்கியமான பாடல் கொடுத்திருக்கீங்கன்னு நன்றி சொன்னேன். அதுக்கு பிறகு ரஞ்சித் சாரும் கால் பண்ணி ‘சூப்பராக பாடியிருக்கீங்க. உங்க குரல் தனித்துவமாக இருக்கு’னு பாராட்டினாரு. மக்களும் இந்தப் பாடலுக்கு அன்பு கொடுக்கிறாங்க. குரலும், பாடல் வரிகளோட உச்சரிப்பும் நல்லா இருக்கு. வழக்கமாக இருக்கிற ஃபோக் பாடலைவிட தனித்துவமாக இருக்கு’னு நேர்மறையான கருத்துக்கள் சொல்றாங்க.
உங்க கணவர் விஷால் சந்திரசேகர் இந்தப் பாடல் கேட்டுட்டு என்ன சொன்னாரு?
(சிரித்துக் கொண்டே…) நான் அவருக்குதான் அதிகமான பாடல்கள் பாடுறேன்னு நினைக்கிறாங்க. இதுனால நான் ரொம்பவே ஃபீல் பண்ணியிருக்கேன். அப்படி கிடையாது. நான் மற்ற இசையமைப்பாளர்களோட இசையிலையும் சின்ன வயசுல இருந்து பாடல்கள் பாடியிருக்கேன். ஆனா, இந்த பாட்டு எனக்கு ஒரு அடையாளத்தைக் கண்டிப்பா தேடி கொடுக்கும்னு நினைக்கிறேன். விஷால் சாருக்கும் இந்த பாடல் ரொம்பவே பிடிச்சிருந்தது. ‘ஜி.வி ரொம்ப சூப்பரா கம்போஸ் பண்ணியிருக்கார்’னு சொன்னாரு. ‘இந்த பாடல்ல உன்னுடைய குரலை வித்தியாசமாக பயன்படுத்தியிருக்காங்க’னு சொன்னாரு. மற்றபடி நான் பாடின பாடல்கள் பத்தி அதிகமா கமென்ட் அவர் பண்ணமாட்டாரு
உங்களோட கரியரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துட்டுபோனதுல சீதா ராமம் படத்துக்கு எந்தளவுக்கு முக்கியமான பங்கு இருக்கு ?
ஆமா, அது ரொம்ப முக்கியமானது. இந்த தங்கலான் பாடலுக்கும் அந்த சீதா ராமம் பாடலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இதுல ஒரு முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு. அது சந்தோஷமான விஷயமும்கூட. இப்படியான வெவ்வேறு வடிவிலான பாடல்கள் பண்ணும்போது நம்மளுடைய பன்முகத்தன்மையை வெளிப்படுத்த முடியுது. இதை தாண்டி நான் நிறைய இசையமைப்பாளர்களுக்கு பாடல்கள் பாடியிருக்கேன். ஆனா, அது வெளியாகும்போது என் குரல்ல வராது. இப்படியான விஷயங்களுக்கு நான் ஃபீல் பண்ணுவேன். எனக்கான பாடல் நிச்சயமா என்கிட்ட வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. மக்களுக்கு நான்தான் சிந்து. நான் இந்த பாடல்களையெல்லாம் பாடியிருக்கேன்னு தெரில. குறிப்பாக , இவங்க இந்த மாதிரியான பாடல்கள்தான் பாடுவாங்கனு மக்களுக்கு நான் இன்னும் பதியல. ஆனா, தங்கலான் என்னுடைய கரியர்ல ஒரு திருப்புமுனையாக இருக்கும்னு 100 சதவீதம் நம்புறேன்.
தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.