ஜூலை மாதம் இதுவரையிலும் 2600க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இலங்கை அரசின் உத்தியோகபூர்வ தகவல் இணையத்தளத்திற்கு இன்று (19) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது பெய்துவரும் பருவ மழை காரணமாக நீர் தேங்கி நிற்கும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே நுளம்புப் பெருக்கத்திற்குக் காhரணம் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த வருடத்தில் இதுவரை 30,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வலியுறுத்தினார். .
இந்த சந்தர்ப்பத்தில் அதற்கெதிரான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து தொற்றுநோய் பரவும் நிலை ஏற்படக் கூடும் என சுட்டிக்காட்டிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், நுளம்புகள் பெருகும் இடங்களை அனைவரும் அழிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்ககையில்..
வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சூழலிலும், டெங்கு நுளம்புகள் பரவக்கூடும். அலுவலகங்கள், பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், கட்டிட வளாகங்கள் போன்ற பொது இடங்களிலும் நுளம்புகள்; பெருகும் அபாயம் மிக அதிகமாக காணப்படுகின்றது. எனவே அந்த இடங்களை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த நேரத்தில் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் அது டெங்குவாக இருக்கலாம், 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். காய்ச்சல் மற்றும் உடல்வலிக்கு பாராசிட்டமால் தவிர வேறு வகையான மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகள், நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.