“காத்திருக்கும் பணிகள் ஏராளம்” – திமுக இளைஞர் அணியினருக்கு உதயநிதி ஸ்டாலின் அழைப்பு

சென்னை: “தமிழகம் வளர்ச்சியடைய 2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு இளைஞரணியின் 45- வது ஆண்டு தொடக்க விழாவில் உறுதியேற்போம்” என்று திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திமுக இளைஞரணியினருக்கு எழுதிய கடித விவரம்: “திமுக இளைஞரணி தொடங்கப்பட்டு, 44 ஆண்டுகள் முடிந்து 45 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கோபாலபுரத்தில் உள்ள ஒரு முடிதிருத்தகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட ‘கோபாலபுரம் இளைஞர் திமுக’தான் 1980-ல் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இளைஞர் அணி என்னும் அதிகாரப்பூர்வ அணியாக மாறியது. கடந்த 1982-ல் மு.கருணாநிதியால், இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின், இளைஞரணியை வலிமை வாய்ந்த ஆற்றல்மிக்க அணியாக உருவாக்கினார். இளைஞரணியின் தலைமையகமான அன்பகத்தையும் அணியின் வசமாக்கினார்.

கருணாநிதி ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்து ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை எதிர்ப்பதாக இருந்தாலும் இளைஞர் அணி தொடர்ந்து முன்னணியில் நின்றது. திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், இளைஞரணியின் செயலாளராக வெள்ளக்கோயில் சாமிநாதன் பணியாற்றினார்.



இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, ஜூலை 4-ம் தேதி இளைஞரணி செயலாளராக நான் பொறுப்பேற்றேன். 25 லட்சம் புதிய இளைஞர்களை கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்தோம். உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்தினோம். நீர்நிலைகளை தூர்வாரினோம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் முதல், நீட் தேர்வை ஒழிக்க கையெழுத்து இயக்கம் வரையிலான போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தோம். கரோனா நிவாரணப்பணியிலும் ஈடுபட்டு மக்கள் துயர் துடைத்தோம்.

இந்தாண்டு சேலத்தில் இளைஞர் அணியின் 2 வது மாநில மாநாட்டை எழுச்சியுடன் நடத்தினோம். தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதல், இளைஞர் அணித் தோழர்களின் உற்சாகமும் ஒத்துழைப்புமே இவற்றைச் சாதித்துக்காட்டின. கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி, திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு ஆயத்தமாகி வருகிறோம். இப்படி இளைஞர் அணி ஆற்றிய பணிகள் ஏராளம் என்றாலும், காத்திருக்கும் பணிகளும் ஏராளம்.

மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. இந்த வளர்ச்சியை சீர்குலைக்க வேண்டும், மக்களைப் பிளவுபடுத்தி, மதவாத, சாதியவாத வெறியூட்டி அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று ஒருபுறம் பாசிச சக்திகள் காத்திருக்கின்றனர். இன்னொருபுறம், திமுக எதிர்ப்பை மட்டுமே முதன்மை இலக்காக்கி திமுக, திராவிட இயக்க முன்னோடிகள், திராவிட மாடல் ஆட்சியின் மீதும், அவதூறுகளையும் பொய்ச்செய்திகளையும் பரப்பி திமுகவை வீழ்த்த நினைப்பவர்களும் காத்திருக்கின்றனர்.

ஆனால், நமக்கோ 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் காத்திருக்கிறது. தொடர் வெற்றிகளைக் குவித்துவரும் தலைவர் தலைமையில், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று, திமுக ஆட்சி மீண்டும் அமைந்து, தமிழகம் மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும். இந்த கடமையை நிறைவேற்றும் பொறுப்பு இளைஞரணிக்கு உள்ளது. சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை, மீண்டும் 2026-ல் அமைக்க இளைஞர் அணியின் 45-ஆம் ஆண்டு விழாவில் உறுதியேற்போம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.