புதுடெல்லி: எட்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடியின் தகவலை விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அடுக்கடுக்கான பொய்களைச் சொல்லி, இளைஞர்களின் வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்” என்று கடுமையைாக சாடியுள்ளார்.
கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் எட்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது வேலைவாய்ப்பின்மை பற்றி பொய்யான கதைகளைப் பரப்பியவர்களை அமைதியாக்கியுள்ளது என்று கடந்த வாரம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். வேலைவாய்ப்பு பற்றிய இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஸ்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளித்தது என்று வலியுறுத்தினார். மேலும், சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்கள் என்டிஏ கூட்டணியின் மூன்றாவது ஆட்சி காலத்தை உற்சாகத்துடன் வரவேற்கின்றனர் என்றார்.
இதற்கு எதிர்வினையாற்றி இருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நரேந்திர மோடி அவர்களே, வேலைவாய்ப்பு பற்றி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பொய்களைக் கூறி, இளைஞர்களின் வெந்தப் புண்ணில் வேலினைப் பாய்ச்சுகிறீர்கள். அதனால்தான் கேள்விக்குரிய ரிசர்வ் வங்கியின் அறிக்கை குறித்து நாங்கள் உங்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.
10 ஆண்டுகளில் 20 கோடி வேலைவாய்ப்புகள் என்று வாக்குறுதி அளித்த நீங்கள் சுமார் 12 கோடி வேலைவாய்ப்புகளை பறித்தது ஏன்? ஆர்பிஐ-ன் அறிக்கையின் படி, 2012 முதல் 2019 வரை மொத்தம் 20.1 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஆனால், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையோ 2 கோடி வேலை வாய்ப்புகளே அதிகரித்தது என்று தெரிவித்துள்ளது. இந்த இரண்டு அறிக்கைக்குமான ஆதாரம் அரசின் பிஎல்எஃப்எஸ் கணக்கெடுப்பே. அப்படி என்றால் எதுதான் உண்மை?
ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு ஆதாரமான அரசின் பிஎல்எஃப்எஸ் கணக்கெடுப்பின்படி, பணிபுரியும் பெண்களில் 37 சதவீதம் பேர் ஊதியம் பெறாமல் இருக்கிறார்கள் என்பது உண்மையல்லவா? கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை 43 சதவீதம் என்ற பயங்கரமான அளவில் உள்ளது. பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி, கரோனா ஆகிய மூன்றின் பாதிப்பு காரணமாக முறைசாரா உற்பத்தி துறையில் ஏழு ஆண்டுகளில் 54 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்ற அரசின் ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கை உண்மையா இல்லையா?
ரிசர்வ் வங்கியின் தரவுகளை நம்பினாலும், கரோனா தொற்று காரணமாக தங்களின் சொந்த கிராமங்களுக்கு சென்ற தொழிற்சாலையில் வேலை பார்த்தவர்கள், ஆசிரியர்கள், சிறு கடைக்காரர்கள் விவசாயக் கூலிகளாக மாறியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் இல்லை. ரிசர்வ் வங்கி அறிக்கை, 2019-20 முதல் 2022-23 வரை சொந்த ஊருக்கு சென்ற 2.3 கோடி பேர் தங்களின் வழக்கமான வேலைக்குத் திரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. ஆர்பிஐ 2023-24 எண்ணிக்கையை எட்டியது என்பது தெளிவாக தெரியவில்லை, முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டதைப் போல தரவுகள் துறைவாரியாக வழங்கப்படவில்லை.
மோடி அவர்களே, ரிசர்வ் வங்கியை தவறாக பயன்படுத்துவது, தவறான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம், வருடத்துக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மறைக்காதீர்கள்” என்று கார்கே தெரிவித்துள்ளார்.