பொள்ளாச்சி: தென்மேற்கு பருவமழையால் சோலையாறு அணை நிரம்பியது. அதன் உபரிநீர் சேடல் டேம் வழியாகவும் பரம்பிக்குளம் அணைக்குச் செல்கிறது. பிஏபி திட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தாண்டு கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழையால், மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு அணைப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பிஏபி திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேல் நீராறு மற்றும் கீழ் நீராறு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக உயரத் தொடங்கியது. இன்று மதியம் 163 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததால் விநாடிக்கு 3,200 கன அடி அளவுக்கு உபரி நீர் சேடல் டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டது.
இன்று மாலை நிலவரப்படி சோலையாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 4,500 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, 165 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தால் அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும். வால்பாறை பகுதியில் பெய்து வரும் தென்மேற்குப் பருவமழையால் இந்தாண்டு பிஏபி பாசன திட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி, பாசனத்துக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.