புதுடெல்லி: ஒரு சில முதலாளிகளை பணக்காரர்களாக்கும் நோக்கிலேயே பட்ஜெட் தயாரிக்கப்படுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டை தயாரிப்பதற்கு முன், சில தொழிலதிபர்கள், வங்கியாளர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளை சந்தித்து அவர் கலந்துரையாடினார்.
ஆனால், மூன்று வேளையும் சாப்பிட முடியாத குடும்பங்களை அவர் சந்தித்திருக்கிறாரா?, பணவீக்கத்தால் போராடும் பெண்களை அவர் சந்தித்திருக்கிறாரா?, பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் போராடும் விவசாயிகளை அவர் சந்தித்திருக்கிறாரா?, வினாத்தாள் கசிவால் துன்புறுத்தப்படும் இளைஞர்களை அவர் சந்தித்திருக்கிறாரா?, உண்மையான இந்தியாவை அவர் சந்தித்திருக்கிறாரா? அவர், அவர்களைச் சந்திக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு சில முதலாளிகளை பணக்காரர்களாக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் வசித்து வந்த விவசாயி புஷ்பேந்திரா, தனது சிறிய நிலத்தில் பட்டாணி மற்றும் கோதுமையை பயிரிட்டார். மற்ற விவசாயிகளைப் போலவே, அவரும் தொடர்ச்சியான நஷ்டத்தை எதிர்கொண்டார். இதனால் அவருக்கு சுமார் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடைசியில் தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், நிதி அமைச்சருக்கோ, பிரதமருக்கோ இது பற்றி எதுவும் தெரியாது. எனவே, பட்ஜெட் அவர்களுக்காக தயாரிக்கப்படவில்லை. நாட்டில் 48% குடும்பங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன. மக்களின் வருமானம் குறைந்து, சேமிப்பின் மூலம் வாழ்கின்றனர்.
பட்ஜெட் வருவதற்கு முன், நாட்டின் பொருளாதாரத்தின் நிலை என்ன என்பதை பார்க்க வேண்டும். குஜராத்தில் காணப்பட்ட உடைந்த தண்டவாளங்களும், மும்பையில் விமானப் போக்குவரத்துத் துறை வேலைகளுக்கு, லட்சக்கணக்கானோர் குவிந்ததும் இந்த அரசாங்கத்தின் தவறான வாதங்களை அம்பலப்படுத்துகின்றன. தவறான பொருளாதார நிர்வாகம், பணமதிப்பிழப்பு, அரைகுறையான ஜிஎஸ்டி அமலாக்கம், திறமையற்ற கோவிட் மேலாண்மை போன்ற கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் ரூ.11.5 லட்சம் கோடி இழப்பை சந்தித்தது.
நாட்டில் 1.5 கோடிக்கும் அதிகமானோர் வேலைகளை இழந்தனர். நாட்டில் ஒப்பந்த ஊழியர்களின் பங்கு 2013 இல் 19% ஆக இருந்தது. 2022ல் அது 43% ஆக அதிகரித்துள்ளது. ஆனால் நரேந்திர மோடி 8 கோடி வேலை வாய்ப்புகளை கொடுத்ததாக கூறி வருகிறார். அப்படியானால், அந்த வேலைகள் எங்கே?
இன்று நாட்டில் பொருளாதார சமத்துவமின்மை விகிதம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை விட மோசமாக உள்ளது. நாட்டின் 40% செல்வத்தை இந்நாட்டின் 1% மக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் காரணமாக பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள். இந்த இடைவெளியைக் குறைக்க இந்த பட்ஜெட் ஏதாவது செய்யுமா?
இன்று நாட்டில் உள்ள அனைவரும் பணவீக்கத்தால் சிரமப்படுகின்றனர். உணவுப் பணவீக்கம் தொடர்ந்து 9% க்கு மேல் உள்ளது. காய்கறி விலை 30% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பணக்காரர்களுக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆனால் ஏழைகளுக்கு? மத்திய அரசு, காய்கறிகளைக் கூட ஏழைகளின் தட்டில் இருந்து பறித்துவிட்டது. இந்தப் பணவீக்கம் போக்குவரத்து, பள்ளிக் கட்டணம், உடைகள் என எல்லா இடங்களிலும் உள்ளது. இந்த பட்ஜெட் பணவீக்கத்தை கட்டுப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது” என தெரிவித்தார்.