10 ஆண்டாக பணி கிடைக்காமல் காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக பணி கிடைக்காமல் காத்திருக்கும் 410 ஆசிரிய பட்டதாரிகளுக்கு தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை மட்டுமே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும், என நிபந்தனை விதிக்கப்பட்டது.தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த 2011-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. அதன்படி கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் நியமனத்துக்கு ஏற்கெனவே பின்பற்றி வந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மீண்டும் நியமனத்தேர்வில் பங்கேற்று, அதில் மெரிட் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின் அடிப்படையில், கடந்த 2023-ம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு நடத்தப்பட்டது.



இந்நிலையில், கடந்த 2014 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, பணி நியமனம் கிடைக்காமல் காத்திருக்கும் 410 ஆசிரியர்கள் புதிய அரசாணைப்படி , நியமனத்தேர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என். கவிதா ராமேஷ்வரும், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பணனும் ஆஜராகி வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், கடந்த 2018-ம் ஆண்டுக்கு முன்பாக பின்பற்றப்பட்ட ஆசிரியர் நியமன நடைமுறையின்படி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மனுதாரர்கள் 410 பேருக்கும் தகுதி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் விரைந்து பணி வழங்க வேண்டும், என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர். மேலும், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு நடத்துவது என கடந்த 2018-ம் ஆண்டு எடுத்த முடிவை, அதற்கு பிந்தைய காலகட்டத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டுமேயன்றி, அதற்கு முந்தைய காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையை கைவிட முடியாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.