புதுடெல்லி: மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முடங்கியுள்ளன. அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளராக உள்ளன.
‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தனது ‘பால்கன் சென்சார்’ மென்பொருளை மேம்படுத்துவது வழக்கம்.அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய ‘கிரவுட்ஸ்டிரைக்கின்’ ‘பால்கன் சென்சார்’ மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, மைக்ரோசாப்டின் சர்வர் நேற்று திடீரென முடங்கியது.
இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் அஸூர்,ஆபீஸ் 365 சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள், தனிநபர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் மென்பொருளில் இயங்கும் கணினி, மடிக்கணினிகளில் நீல திரை தோன்றி, ‘கணினிசெயலிழந்துள்ளது’ என்பதை காட்டியது.
இந்த பிரச்சினை காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து உட்பட உலகம் முழுவதும் தொழில்நுட்ப சேவைகள் முடங்கின. குறிப்பாக, விமானம், ரயில், வங்கி,பங்கு சந்தை, ஊடக சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளன. இந்திய பங்குச் சந்தைநிறுவனங்களான 5பைசா, நுவாமா உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. ‘இந்தியாவின் நிதி சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 10 வங்கிகளின் சேவைகளில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு, உடனடியாக சரிசெய்யப்பட்டது’ என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டஅறிக்கையில், ‘தொழில்நுட்ப பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து தீர்வுகாண முயற்சி செய்து வருகிறோம். மைக்ரோசாப்ட் 365 சேவையை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவன தலைமைசெயல் அதிகாரி ஜார்ஜ் கூறும்போது, “சர்வதேச அளவில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். இதற்காக நிறுவனங்கள், பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறோம். தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வு காண சற்று அவகாசம் தேவைப்படும்” என்றார்.
இதுகுறித்து சர்வதேச சைபர் பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறும்போது, “கடந்த 2017 மே மாதம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் மீது ‘வான்னாகிரை’ என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகள், மடிக்கணினிகள் செயலிழந்தன. தொழில்நுட்ப சேவைகள் பாதிக்கப்பட்டன.
7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதேபோன்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த முறை பாதிப்பு அதிகமாக உள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண எத்தனை நாட்கள் ஆகும் என்பதை உறுதியாக கூற முடியாது” என்றனர்.
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகமே முடங்கியபோதிலும், ரஷ்யா, சீனாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று அந்நாடுகளின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் 200 விமானங்கள் ரத்து: மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் இந்தியாவில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர், விஸ்தாரா, ஏர் இண்டியா நிறுவனங்களின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இண்டிகோவின் 192 விமான சேவைகள் உட்பட நாடு முழுவதும் நேற்று 200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதனால், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் அவதியடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் டிஜிட்டல் பலகைகள் செயல்படாததால், விமான வருகை, புறப்பாடு விவரங்கள் பலகையில் எழுதி வைக்கப்பட்டன. போர்டிங் பாஸ், கையெழுத்து பிரதியாக வழங்கப்பட்டது.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மைக்ரோசாப்ட் உடன் தொடர்பில் உள்ளோம். பிரச்சினைக்கான காரணம் கண்டறியப்பட்டுவிட்டது. கோளாறு விரைவில் சரிசெய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.