ராஞ்சி,
இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த மே 5-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. பீகாரிலும், ஜார்கண்டிலும் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி பி ஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்துள்ளது.
ஹசாரிபாக்கில், தேசிய தேர்வு முகமை கட்டுப்பாட்டில் இருந்த நீட் தேர்வு வினாத்தாளை திருடியதாக ஜாம்ஷெட்பூர் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன சிவில் என்ஜினீயர் பங்கஜ் குமாரை கைது செய்துள்ளது. அவருக்கு உதவி செய்த ராஜு சிங் என்பவரும், சுரேந்தர் சர்மா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாட்னா எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேரையும் சி பி ஐ கைது செய்துள்ளது. அவர்கள் 4 நாட்கள் சி பி ஐ காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியும் சி பி ஐ வளையத்தில் சிக்கினார். அவர் அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கிறார்.
கடந்த 17-ம் தேதி கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட சி பி ஐ அதிகாரிகள், அம்மாணவியை விசாரிக்க வேண்டும் என்று கூறினர். நிர்வாகம் அனுமதி அளித்தநிலையில், மாணவியிடம்17 மற்றும் 18-ம் தேதிகளில் விசாரணை நடத்தினர். 2 நாட்கள் விசாரணைக்கு பிறகு நேற்று அம்மாணவியை சி பி ஐ கைது செய்தது. அவர் பெயர் சுரபி குமாரி.
பங்கஜ் குமார் திருடி எடுத்து வந்த வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு சரியான விடையை குறித்துக்கொடுக்க சுரபி குமாரியையும், பாட்னாவில் கைது செய்யப்பட்ட 4 மருத்துவ மாணவர்களையும் பங்கஜ் குமார் தேர்வு செய்துள்ளார்.
அவர்கள் குறித்துக்கொடுத்த விடைகளை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிப்பதே பங்கஜ் குமாரின் திட்டம். கைது குறித்து மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.இவ்வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.