புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கம்பீரின் பதவிக்காலம் இந்த தொடருடன்தான் தொடங்க உள்ளது.
முன்னதாக இந்த தொடரில் ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கம்பீருக்கும் விராட் கோலிக்கும் இடையேயான உறவு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் பலமுறை ஐபிஎல் போட்டிகளின் போது கம்பீரும், விராட் கோலியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவங்களும், காரசாரமான வார்த்தைகளை பரிமாறிக் கொண்ட சம்பவமும் நடைபெற்றதால் இருவரும் ஒன்றாக இணைந்து எப்படி பணியாற்ற போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் கவுதம் கம்பீருடன் இணைந்து பணியாற்றுவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என்று விராட் கோலி பி.சி.சி.ஐ.-யிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கம்பீருடன் இணைந்து, தான் பணியாற்ற எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் இந்திய அணிக்காக விளையாடுவதுதான் முக்கியமான ஒன்று என்றும் விராட் கோலி கூறியுள்ளாராம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான மோதல்களை நாங்கள் இந்திய அணிக்குள் கொண்டு வர மாட்டோம் என்றும் வீரர்களின் ஓய்வறையில் இந்திய அணியின் வெற்றி மட்டுமே முக்கியம் என்றும் விராட் கோலி கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முந்தைய கருத்து வேறுபாடுகளிலிருந்து முன்னேற தயாராக உள்ளோம் என இருதரப்பினரும் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.