மைக்ரோசாப்ட் செயலிழப்பு: உலகம் முழுவதும் 1,400 விமான சேவை ரத்து

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் நேற்று 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன.

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, தைவான், ஐக்கிய அரபு அமீரகம், தென்கொரியா, அயர்லாந்து, துருக்கி, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்காவின் யூனைடெட் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் விமான சேவைகளை முற்றிலுமாக நிறுத்தின.

அமெரிக்காவில் 512, ஜெர்மனியில் 92, கனடாவில் 21, இத்தாலியில்45 என உலகம் முழுவதும் நேற்று 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 3,000-க்கும்மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.



இதுகுறித்து சர்வதேச விமானசேவை நிறுவனங்கள் கூறும்போது, “எங்களது நிர்வாகத்துக்குமைக்ரோசாப்ட் அஸுர், டைனமிக்ஸ் 360, பவர் ஆப்ஸ் சேவைகளை பயன்படுத்தி வருகிறோம்.இவை முடங்கியதால் எங்களதுவிமான சேவைகளை ரத்து செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தன.

ரயில் சேவை பாதிப்பு: பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. பிரிட்டனின் பங்கு சந்தை வர்த்தகம் நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு பங்கு சந்தை வர்த்தக நிறுவனங்களின் சேவைகள் முடங்கின.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியநாடுகளில் வங்கிச் சேவைகள்பாதிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா, பிரிட்டனில் ஏபிசி, ஸ்கை நியூஸ்ஆகிய தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு முழுமையாகநிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ட்ரா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வணிக வளாகங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நாடுகளில் ஏடிஎம் சேவைகளும் முடங்கின.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் மருத்துவமனைகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அறுவைச் சிகிச்சைகள் நேற்றுரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் அவசர உதவி எண்ணான 911 சேவை பாதிக்கப்பட்டது. மேலும் நேற்று 911 சேவையைபயன்படுத்த முடியவில்லை.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் நேற்று கூறும்போது, “மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப கோளாறு பிரச்சினை குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “உலக வரலாற்றில் இது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப தோல்வி’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

ரஷ்யாவின் சைபர் தாக்குதல்? – கடந்த ஜனவரி மாதம் ரஷ்ய ஆதரவு பெற்ற நொபிலியம் என்ற குழு, அமெரிக்க அரசின் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை குறிவைத்துசைபர் தாக்குதல் நடத்தியது. இதேபோல கடந்த மார்ச் மாதம் இதேகுழு, அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை திருட முயற்சி செய்தது.அப்போது மைக்ரோசாப்டின் மென்பொருட்களில் வைரஸ்களை செலுத்தி சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை மைக்ரோசாப்ட் நிறுவனமும் உறுதி செய்தது.

அந்த நிறுவனம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில், எங்களது மென்பொருட்களில் வைரஸை செலுத்தி தகவல்களை திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை வெற்றிகரமாக முறியடித்தோம்” என்று தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் அச்சுறுத்தலை சமாளிக்கமைக்ரோசாப்ட் மென்பொருட்களில் சைபர் பாதுகாப்பை மேம்படுத்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம் தனது மென்பொருளை அப்டேட் செய்து உள்ளது. இதில் பிரச்சினை ஏற்பட்டு இப்போது ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் தொழில்நுட்ப சேவை, வர்த்தகம் முடங்கியிருக்கிறது.

இதுகுறித்து கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இது சைபர் தாக்குதல் அல்ல, எங்களது மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மைக்ரோசாப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ரஷ்யாவின் நொபிலியம் குழு இந்த முறையும் சைபர் தாக்குதல் நடத்தியிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.