புதுடெல்லி: அமெரிக்க ராணுவத் தளவாட நிறுவனமான லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் டைக்லெட் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில்,“பிரதமர் நரேந்திர மோடியை லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் டைக்லெட் சந்தித்து பேசினார். இந்தியா –அமெரிக்கா இடையிலான விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் சார்ந்த ஒத்துழைப்பில் லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் முக்கிய பங்குதாரராக உள்ளது.
இந்தியாவில் தயாரிப்போம், உலகுக்காக தயாரிப்போம் என்ற தொலைநோக்கை நனவாக்குவதில் இந்த நிறுவனத்தின் உறுதிப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் ராணுவத் திறன்களை மேம் படுத்துவதற்காக விண்வெளி, கடற்படை அமைப்புகள், ஏவுகணை பாதுகாப்பு போன்ற துறைகளில் நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு லாக்கீட் மார்ட்டின் வழங்கி உள்ளது.
லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் ஹைதரா பாத்தில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவ னத்துடன் இணைந்து சி130ஜே ரக விமானத்தின் பின்புற இறக்கை மற்றும் வால் பகுதியை தயாரிக்கிறது.
இந்த நிறுவனம் இதுவரை 200-க்கும்மேற்பட்ட இந்த அமைப்புகளை வெற்றிகரகமாக தயாரித்துள்ளது. மேலும் இதில் இந்திய உதிரிபாகங்களின் பயன்பாட்டை அதிகரித் துள்ளது.
இந்த நிறுவனத்தின் சி130ஜே ரக விமானம் இந்திய விமானப் படையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. லாக்கீட் மார்ட்டின் நிறுவனம், ஹெலிகாப்டர் கேபின்கள் தயாரிப்பதற்கான தனது செயல்பாடுகளை ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு மாற்றியுள்ளது.