Doctor Vikatan: கிரியாட்டின் என்பது என்ன… அது ஒருவருக்கு எவ்வளவு இருக்க வேண்டும்? சராசரி அளவைத் தாண்டும்போது கிட்னி பாதிக்கப்படும் என்பது உண்மையா… இதன் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும் வழிகள் என்ன?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் மகப்பேறு மருத்துவர் ப்ரீத்தி கப்ரா
கிரியாட்டினைன் (Creatinine) மற்றும் கிரியாட்டின் (Creatine) என இதில் இரண்டு உண்டு. நம் தசைகளில் கிரியாட்டின் பாஸ்பேட் என ஒன்று இருக்கும். அது உடைந்து உருவாவதுதான் கிரியாட்டினைன். இந்த கிரியாட்டினைன் நம் உடலில் இருந்து சிறுநீர் வழியே வெளியேறும். பிரித்தெடுக்கப்பட்ட இந்த கிரியாட்டினைன், மீண்டும் நம் உடலுக்குள் வராது. அதனால்தான் இந்த கிரியாட்டினைன் என்பதை வேஸ்ட் பொருள் என்று சொல்கிறோம்.
நம்முடைய சிறுநீரகங்கள் செயலிழந்துபோகும்போதுதான் கிரியாட்டினைன் அளவு நம் உடலில் ரத்தத்தில் அதிகரிக்கும். பெண்களைவிட இயல்பாகவே ஆண்களுக்கு கிரியாட்டினைனின் சராசரி அளவு சற்று அதிகமாகவே இருக்கும். ஆண்களுக்கு தசைத்தன்மை இயல்பிலேயே அதிகம் என்பதே இதற்கு காரணம். பெண்களுக்கு 0.6 முதல் 1 மில்லிகிராம்/டெசிலிட்டர் என்ற அளவிலும், ஆண்களுக்கு 0.7 முதல் 1.2 மில்லிகிராம் /டெசிலிட்டர் என்ற அளவிலும் இருக்கும்.
நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தைராய்டு பாதிப்புள்ளவர்கள், அடிக்கடி இன்ஃபெக்ஷனுக்கு உள்ளாவோர், குறிப்பாக புராஸ்டேட் இன்ஃபெக்ஷன் ஏற்படுவோர் போன்றோர் குறிப்பிட்ட இடைவெளியில் இதன் அளவை டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்க வேண்டிய சராசரி அளவைத் தாண்டும்போது அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று கண்டறிய வேண்டியது அவசியம்.
உதாரணத்துக்கு ரெட் மீட், இறைச்சி மற்றும் புரதம் அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுகிறோமா என்று பார்க்க வேண்டும். தசைகளில் காயங்கள் ஏற்படுகின்றனவா, உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறதா, புகை அல்லது மதுப்பழக்கங்களின் காரணத்தினாலா என்றெல்லாம் யோசித்தால், எந்தக் காரணத்தால் கிரியாட்டினைன் அளவு அதிகரிக்கிறது என்று ஓரளவு யூகிக்க முடியும். அதன் பிறகு அதிக புரதச்சத்து, அதிக உப்புள்ள உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். நிறைய காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள், பருப்பு போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.
இவற்றையும் தாண்டி, சராசரியை விட கிரியாட்டினைன் அளவு அதிகரித்தால் யூரியா அளவுக்கான டெஸ்ட்டும் செய்ய வேண்டியிருக்கும். சிறுநீரில் கிரியாட்டின் மற்றும் கிரியாட்டினைன் இரண்டும் எந்த அளவுக்கு ஃபில்டர் ஆகின்றன என்பதையும், சிறுநீரில் கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ ஆல்புமின் புரோட்டீன் எவ்வளவு உள்ளது என்பதையும், சிறுநீரில் புரததத்தின் அளவு போன்றவற்றையும் டெஸ்ட் மூலம் கண்டறிய வேண்டும். இவற்றின் மூலம் சிறுநீரகங்களின் செயல்பாடு எப்படியிருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
கிரியாட்டினைன் அளவு சராசரியைவிட குறைவாக இருந்தால், அவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்க்கிறதா, கர்ப்பமா இருக்கிறாரா, கல்லீரலில் பாதிப்பு இருக்கிறதா என்றெல்லாம் கவனிக்க வேண்டும். உணவுப்பழக்கம், வாழ்வியல் முறை மாற்றம் எல்லாவற்றையும் செய்த பிறகும், கிரியாட்டினைன் அளவு குறையவில்லை என்றால், மருத்துவரை அணுக வேண்டும். பொட்டாசியம் அளவு, ரத்த அழுத்த அளவு போன்றவையும் பார்க்கப்பட வேண்டும். இப்படி எல்லா அளவுகளையும் பார்த்த பிறகு மருத்துவர்கள் தேவை என நினைத்தால் டயாலிசிஸ் என்ற சிகிச்சையைப் பரிசீலிப்பார்கள்.
கிரியாட்டினைன் அளவு அதிகரிப்பதன் அறிகுறிகளை எல்லோரும் உணர மாட்டார்கள். சிலர் வாந்தி, களைப்பு, சிறுநீர் கழிப்பது குறைவது, கால்களில் வீக்கம் போன்றவற்றை உணர்வார்கள். அந்த நிலையில் கிரியாட்டினைன் அளவை டெஸ்ட் செய்து பார்க்க வேண்டியிருக்கும். சாதாரண விஷயங்களுக்குக்கூட அடிக்கடி மருந்துகள், பெயின் கில்லர் எடுக்கும்போது, சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். கிரியாட்டினைன் அளவும் அதிகரிக்கும். எனவே, இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.