- அந்தப் பொறுப்பில் இருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை – தொழில்முறை முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.
- முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் முன்னேற்றத்துக்கான மகஜர் ஜனாதிபதியிடம் கையளிப்பு.
- எதிர்வரும் நாட்களில் முச்சக்கரவண்டிகளுக்கான புதிய செயலி – முன்னாள் அமைச்சர் ரவீ கருணாநாயக்க.
மறுமலர்ச்சி கண்டுவரும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பாரிய முதலீட்டாளர்களை வரவேற்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதேவேளை, கடந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் முன்னேற்றுத்துக்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் தொழில்சார் முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் (18) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.
இலங்கை இதுவரை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள் பொது மக்களுக்கும் பகிரப்பட வேண்டும் என்றும், அந்தப் பொறுப்பில் இருந்து தாம் ஒருபோதும் விலகப் போவதில்லை என்பதோடு, அதற்காக அரசாங்கம் சிறப்பான பணிகளை ஆற்றி வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழில் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் இதன்போது போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“முச்சக்கர வண்டிகளே மக்களின் பிரதான போக்குவரத்து சாதனமாக மாறியுள்ளது. ஒரு புறத்தில் விவசாயம் செய்யும் அதேநேரம், மறுபுறம் முச்சக்கர வண்டிகளை ஓட்டி வருமானம் ஈட்டுகின்றனர். 2022-2023 ஆண்டு சிறு போகத்தில் நல்ல அறுவடை கிடைத்தது. அதன் பிறகு, பெரும்போகத்திலும் நல்ல விளைச்சலைப் பெற முடிந்தது. அதற்கேற்ப விவசாயிகளின் கைகளுக்குப் பணம் வரத் தொடங்கியது. விவசாயிகளின் வர்த்தகம் வளர்ச்சியடைந்ததால், போக்குவரத்துச் செயற்பாடுகளும் அதிகரித்தன.
2023 இல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கினர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் முச்சக்கரவண்டி சாரதிகளின் பொருளாதாரம் உயர்ந்தது. ஒருபுறம், விவசாயிகளின் விளைச்சல் செயற்பாடுகளுக்கு உதவும் அதேநேரம் முச்சக்கர வண்டி சாரதிகள் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றனர்.
இவ்விரு துறைகள் மூலம் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. இந்த பொருளாதார வளர்ச்சியினால் தான் இரண்டு வருடங்கள் முடிவதற்குள் எமது நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க முடிந்தது. வேறு எந்தவொரு நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வந்ததில்லை. ஆனால் நாம் வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டிருப்பதோடு, 08 பில்லியன் டொலர் கடன் நிவாரணத்தையும் பெற்றிருக்கிறோம்.
இன்று நாடு ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது. நாம் இங்கிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாமல் முன்னெடுத்துச் செல்ல வேறு வழிகள் உள்ளதா? என்பது குறித்து நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
குறிப்பாக முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழில்சார் முன்னேற்றுக்கான பரிந்துரைகள் இங்கு முன்வைக்கப்பட்டன. அந்த முன்மொழிவுகளை நாம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த திட்டங்களை செயல்படுத்தும் போது இத்தொழில் தொடர்பான சங்கங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இந்த தொழில்சார் சட்டங்கள் தேவைப்படும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதனை செய்ய வேண்டிய முறைமை தொடர்பில் நீங்கள் தீர்மானிக்கலாம். நலன்புரிச் செயற்பாடுகள் குறித்தும் கனவம் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில், குறிப்பாக காலநிலை மாற்றத்தினால் மின்சார வாகனங்கள் குறித்து கவனம் செலுத்தும்போது, தற்போதுள்ள இந்த வாகனங்களுக்கு என்ன வகையான நிவாரணம் வழங்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகள் அனைத்தும் உலகில் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. இது தொடர்பாக உலக நாடுகள் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன. உலக நாடுகளைப் பின்பற்றிச் செயலாற்ற வேண்டியதும் அவசியமாகிறது.
அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேவை. முதலீடுகள் ஊக்குவிப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் ஏற்றுமதியையும் அதிகரிக்க முடியும். ஆனால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் வேளையில் கடந்த கால நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்த பொருளாதார வளர்ச்சியின் பலன்களை இந்த நாட்டின் சாதாரண மக்களுக்கு வழங்குவதே எனது பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. அந்த மக்களுக்காக, ஆறுதல் திட்டத்தை செயல்படுத்தினோம். அங்கு, நலத்திட்ட உதவிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை, மூன்று மடங்காக உயர்த்தப்பட்டு, பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
கடந்த புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. அத்துடன் இலவச காணி உரிமையை வழங்க உறுமய வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் வீடுகளின் உரிமையை வழங்க ஆரம்பித்துள்ளோம். மேலும், பெருந்தோட்ட பிரதேசங்களை கிராமங்களாக மாற்றும் திட்டங்களும் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் இந்நாட்டின் சாதாரண மக்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு ஆர்ம்பிக்கப்பட்டவையாகும்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவிலான முதலீட்டாளர்களை நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அழைக்கிறோம். கடந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறு, நடுத்தர வர்த்தகர்கள் உள்ளிட்ட சாதாரண மக்களை முன்னேற்றும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளோம்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் போது முச்சக்கரவண்டி சாரதிகளையும் நாம் மறந்துவிடவில்லை. இந்த பொருளாதார முறையை கைவிட்டால் என்ன நடக்கும்? கடன் நிபந்தனைகள் மீறப்பட்டால் என்ன நடக்கும்? என்பதை பற்றியும் சிந்திக்க வேண்டும். இன்று ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளோம். நாம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டுமானால், சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து செயல்பட வேண்டும். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,
”இன்று நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால், தொழில்முறை ஓட்டுநர்களாகிய நீங்கள் பல சங்கங்களை இணைத்து புதிய போக்குவரத்து சங்கத்தை உருவாக்கியுள்ளீர்கள். நாம் ஒரு பொருளாதாரக் கொள்கையின் கீழ் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது அவசியம். அன்று இந்த நாட்டில் வரிசை யுகம் காணப்பட்டது. காலையில் ஒரு கூட்டம் வரிசையில் நின்றது. மாலையில் இன்னுமொரு கூட்டம் வரிசையில் சேர்ந்தனர். மேலும் பலர் வரிசையில் காத்திருந்து உயிரிழந்தனர். அவ்வாறான இருண்ட ஒரு நாட்டையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்று அவர் நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்கிறார்.
08 இலட்சத்திற்கும் அதிகமானோர் முச்சக்கரவண்டித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மை காரணமாக கடந்த காலங்களில் பாரிய நெருக்கடிகளை நீங்கள் எதிர்கொண்டீர்கள். முச்சக்கர வண்டிகள் தொழில் ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் நம் நாட்டிற்கு வருகை தருகின்றனர். நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் பெரும் சேவை செய்து வருகின்றனர். அடுத்த சில நாட்களில் முச்சக்கரவண்டிகளுக்கான புதிய தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
ஒருங்கிணைந்த போக்குவரத்து தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க,
கொவிட் தொற்று காலத்தின்போது, போக்குவரத்துத் துறையில் நாம் மிகவும் பாதிக்கப்பட்டோம். எமது தொழில் வாழ்க்கை முற்றிலுமாக ஸ்தம்பித்தது. பேருந்துகள், வேன்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வீடுகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டன. அந்த கடினமான காலத்திற்குப் பிறகு, எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளின் சகாப்தம் ஏற்பட்டது. மீண்டும் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. ஓரிரு நாட்கள் வாகனத்தை போக்குவரத்தில் ஈடுபடுத்திவிட்டு மீண்டும் 4 – 5 நாட்கள் எரிபொருள் வரிசையில் அவதிப்பட்டோம். இதனால் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
போராட்டத்தின் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க முறையான பொருளாதார திட்டத்தின் மூலம் படிப்படியாக நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றார். நாம் எமது தொழிலை மீண்டும் ஆரம்பிக்க முடிந்தது. மீண்டும் எமக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் நாம் சுவாசிக்க ஆரம்பித்தோம். மக்களுக்கு இந்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க சிலர் வேலைநிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டை சீர்குலைக்க யாராவது வேலைநிறுத்தங்களைத் தொடங்கினால், அவர்களுக்கு எமது ஆதரவு கிடைக்காது. நாடு சீர்குலைந்தால், மீண்டும் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகள் சகாப்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எனவே, மீண்டும் வரிசைகளில் நிற்கும் அவசியம் மக்களுக்கு இல்லை. மீண்டும் பரீட்சித்துப் பார்க்கும் நேரம் இது அல்ல. வீழ்ந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு ரணில் விக்ரமசிங்கவே இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர வேண்டும்.” என்று தெரிவித்தார்.
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஹேம குமார குணசேகர,
”சமூகத்தில் விசேட பங்களிப்பை வழங்கும் தொழில்சார் முச்சக்கரவண்டி சாரதிகள் ஜனாதிபதியை சந்திப்பது விசேட சந்தர்ப்பம் என்பதைக் குறிப்பிட வேண்டும். முச்சக்கர வண்டி சாரதிகள் சமூகத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்காத புரட்சிகரக் குழுவாக அறியப்படுகின்றனர். இத்துறையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ‘ஐக்கிய பயணிகள் போக்குவரத்து சேவை தொழிலாளர்களின் சங்கம்’ என்ற புதிய சங்கம் உருவாக்கப்பட்டது. இதுபோன்ற வேலைத் திட்டங்கள் மூலம் தொழில்முறை ஓட்டுநர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்றும் நம்புகின்றோம்.” என்று தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசகர் மஹிந்த கஹந்தகம, ஐக்கிய பயணிகள் போக்குவரத்து சேவை தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரஹ்மான், தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்துறையினர் சங்கத்தின் ரொஹான் பெரேரா மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகள், முச்சக்கர வண்டி சாரதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.