பாகிஸ்தானில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் அமீன் முகமது உல் ஹக் சாம் கானை ராணுவ வீரர்கள் கைது செய்தனர். இவர் பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டவர் ஆவார்.

பாகிஸ்தானில் சமீபகாலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து உள்ளது. குறிப்பாக பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துதல் என அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதனால் சட்டம், ஒழுங்கு பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. இதற்காக ராணுவமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பினர் பதுங்கி இருப்பதாகவும், மிகப்பெரிய தாக்குதலை நடத்த அவர்கள் சதித்திட்டம் தீட்டுவதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஜெஹ்லம் நகரில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்து பதுங்கி இருந்த அல்-கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் அமீன் முகமது உல் ஹக் சாம் கான் (வயது 64) கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமீன் முகமது ஏற்கனவே ஐ நா சபையின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியாகவும் இவர் செயல்பட்டார். எனவே பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ராணுவத்தின் இந்த நடவடிக்கை முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.