தற்போதைய இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எம்ஐ கேப்டவுன் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் வரும் ஃபிரான்சைஸ் லீக் SA20ல் எம்ஐ கேப்டவுன் முக்கியமான ஒரு அணியாகும். இந்தியன் பிரிமியர் லீக் உரிமையாளர்கள் தான் அங்கும் அணிகளை வாங்கியுள்ளனர். எம்ஐ கேப்டவுன், டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகளுடன் கடந்த 2023ம் ஆண்டு இந்த லீக் தொடங்கப்பட்டது. இந்த லீக்கில் முதல் இரண்டு தொடரிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை அணியில் இணையும் பென் ஸ்டோக்ஸ்
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, SA20ன் வரவிருக்கும் மூன்றாவது சீசனில் எம்ஐ கேப்டவுன் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஜனவரியில் நடைபெறும் இந்த தொடருக்காக 800,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 8.65 கோடி) பென் ஸ்டோக்ஸ்க்கு எம் நிர்வாகம் ஊதியமாக வழங்க உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை அணியில் பென் ஸ்டோக்ஸ் விளையாட வில்லை. மேலும் கடந்த ஆண்டு நடைபெற ஒருநாள் உலக கோப்பையிலும் அணி நிர்வாகம் கேட்டு கொண்டதற்காக விளையாடினார். தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் பென் ஸ்டோக்ஸ். எனினும் உலகளவில் திறமையான ஆல் ரவுண்டராக இருந்து வருகிறார்.
2022ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்று இருந்தது. அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் முக்கிய வீரராக இருந்தார். 2017ம் இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் மதிப்புமிக்க வீரராக இருந்தார். 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் 16.25 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை எடுத்தது. ஆனால் காயம் காரணமாக ஒருசில போட்டிகளில் மட்டுமே விளையாடினர். 2024ம் ஆண்டு சிஎஸ்கே அவரை அணியில் இருந்து விடுவித்தது. SA டி20 லீக்கில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மீண்டும் இங்கிலாந்தின் வைட் பால் போட்டிகளில் அவரை பார்க்க முடியும். ஸ்டோக்ஸ் தற்போது இங்கிலாந்து டி20 அணியில் இல்லை. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்க மற்ற போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா என்பதும் கேள்விக்குறியே. அதனை தொடர்ந்து பிப்ரவரியில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுவரை 43 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டோக்ஸ் 500 ரன்களுக்கு மேல் அடித்து, 26 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி தொடர் வெற்றிகளை பெற்று வந்தாலும் இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்து இருந்தது.