கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கூந்தலை வெட்டிபெண்ணுக்கு தண்டனை அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளும் திரிணமூல் கட்சிக்கு பாஜக கண்டனம் தெரிவித்து உள்ளது.
மேற்கு வங்கத்தில் பெண் ஒருவரின்தலைமுடியை ஆண் ஒருவர் கத்திரிக்கோலால் வெட்டி அகற்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது.இதனை பாஜக மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: இம்முறை ஹவுராவின் டோம்ஜூரில் இச்சம்பவம் நடந்துள்ளது. டோம்ஜூர் தொலைதூரப் பகுதி அல்ல. ஹவுரா நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி. இந்த சம்பவம் ஒரு தனி நிகழ்வு அல்ல, கூச் பெஹார் முதல் சோப்ரா, அரியதாஹா மற்றும் டோம்ஜூர் வரை இந்த துயரம் தொடர்கிறது.
இந்த கொடூர செயலை செய்த இஷாலஷ்கர், அப்துல் ஹுசைன் லஷ்கர்உள்ளிட்ட அனைவரும் திரிணமூல் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
மேற்கு வங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீரழிந்து மாநிலம் முழுவதும் கட்டப் பஞ்சாயத்து நடைபெறுகிறது. இங்கு உடனடி நீதி, குறிப்பாக பெண்கள் விஷயத்தில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு சுவேந்து அதிகாரி கூறி உள்ளார்.
வாக்கு வங்கி அரசியல்: பாஜக ஐ.டி. பிரிவின் தலைவர்அமித் மாளவியாவும் இந்த வீடியோவை பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் தனதுபதிவில், “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது வாக்கு வங்கியை பாதுகாக்க, மாநிலத்தை பழமைவாத பாதையில் பின்னோக்கி தள்ளியுள்ளார்” என்று கூறியுள்ளார்.
அமித் மாளவியா இம்மாத தொடக்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ராவின் கூட்டாளி ஜெயந்தா சிங் மற்றும் அவரது கும்பலால் பொதுஇடத்தில் பெண் ஒருவர் தாக்கப்படும் வீடியோவை பகிர்ந்துகொண்டார்.