திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிட்யூட் பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்தச் சிறுவன் மாற்றப்பட்டு, அங்கு தனி வாரிடில் சிகிச்சை அளிக்கப்படும். இந்த வைரஸ் பரவல் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து சாம்பிள் பெறப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
மலப்புரத்தில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதாரத் துறையினர் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 1998-ம் ஆண்டில் மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இது பெரும்பாலும் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. கடந்த 2018-ல் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அப்போது 17 பேர் வைரஸால் உயிரிழந்தனர். பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு கொச்சியிலும் கடந்த 2021-ம் ஆண்டில் கோழிக்கோட்டிலும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2024 செம்படம்பரிலும் நிபா வைரஸ் பரவல் இருந்தது நினைவுகூரத்தக்கது.