புதுடெல்லி: வட மாநிலங்களில் நாளை ஜுலை 22 முதல் ஆகஸ்ட் 2 வரை கன்வர் யாத்திரை எனும் காவடி யாத்திரை தொடங்குகிறது. ஆண்டுதோறும் இந்த புனித யாத்திரையின்போது சட்டம் ஒழுங்கை காப்பது உ.பி. அரசுக்கு சவாலாகி வருகிறது. இதற்கு முடிவுகட்ட இந்த ஆண்டு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காவடி யாத்திரை பாதையில் உள்ள கடைகள், ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் உரிமையாளர் மற்றும் பணியாளர்களின் பெயர்களை எழுதி வைக்க முதல்வர் யோகி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி ஆகியவையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அண்டை மாநிலமான உத்தராகண்டும் இந்த உத்தரவை அமலாக்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த உத்தரவின் தாக்கம் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் முசாபர் நகரின் தாபா ஓட்டல் வியாபாரிகள் வட்டாரம் கூறும்போது, “டெல்லியிலிருந்து சுமார் 270 கி.மீ. தூரம் வரை உள்ள காவடிப் பாதையில் முஸ்லிம்கள் தங்கள் கடைகளை இந்துக்களிடம் கிடைத்த காசுக்கு குத்தகைக்கு விடத் தொடங்கியுள்ளனர். முஸ்லிம் கடைகள் மட்டுமின்றி இந்துக்கள் கடைகளில் பணியாற்றி வந்த முஸ்லிம்களும் யாத்திரை முடியும் வரை விடுப்பு அளிக்கப்பட்டு அல்லது நீக்கப்பட்டு வருகின்றனர்.
அரசின் இந்த உத்தரவு தொடர்பாக உள்ளூர் காவல் துறையினரும் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக காவடிப் பாதைகளில் இந்துக்கள் மட்டுமே வியாபாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.
கடந்த வருடம் முசாபர் நகரின் ஒரு தாபாவில் காவடி ஏந்திய பக்தர்கள் சாப்பிட்ட பிறகு அங்கு சமையல் செய்தது முஸ்லிம்கள் எனத் தெரியவந்தது. இதனால், கோபம் அடைந்த அவர்கள் அக்கடையை சூறையாடியதால் அப்பகுதியில் கலவர சூழல் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கவே உ.பி. அரசு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது என காவல் துறையினர் விளக்கம் அளிக்கின்றனர்.
உ.பி. அரசின் உத்தரவுக்கு எதிராக அம்மாநில காங்கிரஸார் அடுத்த 3 நாட்களுக்கு நூதனப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதையொட்டி ‘மொஹபத் கீ துக்கான் – நோ இந்து முஸ்லிம்’ (அன்பிற்கான கடைகள் – இந்து முஸ்லிம் அல்ல) என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். காவடிப் பாதையில் மலர்களை தூவி வரவேற்று குளிர்பானம் மற்றும் உணவு வகைகளை முஸ்லிம்கள் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகர்கள் கருத்து மோதல்: பிரபல வில்லன் நடிகரான சோனு சூட் தனது கருத்தாக, “ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர்ப் பலகை மட்டுமே இருக்க வேண்டும் அது: மனிதநேயம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலடியாக பாலிவுட் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத், “ஏற்றுக் கொள்கிறேன். ஹலால் என்பதற்கு மாறாக மனிதநேயம் இருக்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக பாலிவுட் கதை வசனகர்த்தா ஜாவீத் அக்தர், முதல்வர் யோகியின் உத்தரவை விமர்சித்ததுடன், “ஜெர்மனியின் நாஜிக்கள்தான் இதுபோல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அடையாளப்படுத்தி வந்தனர்’’ எனப் பதிவிட்டுள்ளார்.