“பெயரை மறைக்கத் தேவையில்லை” – கன்வார் யாத்திரை சர்ச்சை; ராம்தேவ் கருத்து

புதுடெல்லி: கன்வார் யாத்திரை வழித்தட உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என்ற உ.பி அரசின் உத்தரவுக்கு பாபா ராம்தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, “ஒவ்வொருவரும் தங்கள் பெயர் குறித்து பெருமைப்பட வேண்டும். பெயரை மறைக்கத் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

வட மாநிலங்களில் நாளை ஜுலை 22 முதல் ஆகஸ்ட் 2 வரை கன்வர் யாத்திரை எனும் காவடி யாத்திரை தொடங்குகிறது. ஆண்டுதோறும் இந்த புனித யாத்திரையின்போது சட்டம் ஒழுங்கை காப்பது உ.பி. அரசுக்கு சவாலாகி வருகிறது. இதற்கு முடிவுகட்ட இந்த ஆண்டு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காவடி யாத்திரை பாதையில் உள்ள கடைகள், ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் உரிமையாளர் மற்றும் பணியாளர்களின் பெயர்களை எழுதி வைக்க முதல்வர் யோகி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி ஆகியவையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.



அண்டை மாநிலமான உத்தராகண்டும் இந்த உத்தரவை அமலாக்குவதாக அறிவித்துள்ளது. உத்தராகாண்ட் மற்றும் உ.பி. அரசாங்கத்தின் நடவடிக்கைக்குப் பிறகு, உஜ்ஜைன் நகராட்சி அமைப்பும் கடைக்காரர்கள் தங்கள் பெயர்களைக் காட்ட உத்தரவிட்டுள்ளது. அதோடு, உஜ்ஜைன் மேயர் முகேஷ் தட்வால் இந்த உத்தரவை மீறினால் அபராதம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது , “ராம்தேவ் தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதில் சிக்கல் இல்லை என்றால், ரஹ்மானுக்கு தனது அடையாளத்தை வெளியிடுவதில் ஏன் சிக்கல்?

ஒவ்வொருவரும் தங்கள் பெயர் குறித்து பெருமைப்பட வேண்டும். பெயரை மறைக்கத் தேவையில்லை, பணியில் தூய்மை மட்டுமே தேவை. நமது பணி தூய்மையாக இருந்தால் போதும், நாம் இந்து, முஸ்லிம் அல்லது வேறு எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை…” என்றார்.

கண்டனம்: பல எதிர்க்கட்சி தலைவர்கள் கன்வார் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதை இது பிரதிபலிக்கிறது என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் பிருந்தா காரத்தும் யோகி ஆதித்யநாத் அரசை கடுமையாக சாடினார். அதாவது, “இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உத்தரப் பிரதேச அரசு இப்படி ஆணைகளைப் பிறப்பித்து அழித்து வருகிறது. ஒட்டுமொத்த சமூகமும் அவமானப்படுத்தப்படுகிறது. சமூகத்தை பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள். அதை கண்டிக்கிறேன்.” என்று அவர் கூறினார். சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) எம்.பி சஞ்சய் ராவத், நாட்டின் ஒற்றுமையை பாஜக முடிவுக்குக் கொண்டுவருவதாக குற்றம் சாட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.