பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள வீட்டின் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பா.ஜ.க, அ.தி.மு.க, தி.மு.க எனக் கட்சி பேதமில்லாமல் 10-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும், விசாரணை சரியாக நடைபெறவில்லை என அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்தும், நீதி கேட்டும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று கண்டனப் பேரணி நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் சி.பி.சி.ஐ.டி சிறப்பாக புலனாய்வு செய்துவருவதை அறிந்திருப்பீர்கள். சி.பி.சி.ஐ.டி சிறப்பாக புலனாய்வு செய்து வருவதால்தான் குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர். யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரோ அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதே அரசின் நோக்கம். இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.