புதுடெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கொலைசெய்ய பாஜக சதி திட்டம் தீட்டியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் பேசியதாவது: பாஜகவும், டெல்லியின் துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனாவும், முதல்வரின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். சிறையில் அவரை கொல்ல சதி செய்வதாக தெரிகிறது. கேஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து ஆளுநர் மற்றும் பாஜக தவறான அறிக்கைகளை வெளியிடுவது எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, சர்க்கரையின் அளவு அதிகரித்ததால் அவருக்கு இன்சுலின் தேவைப்பட்டது. அப்போது கேஜ்ரிவால் மாம்பழம், பூரி சாப்பிடுகிறார். கலோரிகளை அதிகப்படுத்துகிறார் என்று தெரிவித்தனர். இதையடுத்து, இன்சுலின் கொடுக்க மறுத்துவிட்டனர். அப்போது நீதிமன்றம் தலையிட்டதால், அவருக்கு இன்சுலின் கிடைத்தது. எந்த நபர் தனக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தும் சாப்பிடாமல் தன் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புவார்.
அவருக்கு ஏதாவது நேர்ந்தால் பதில் சொல்ல வேண்டும். இந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறோம். கூடிய விரைவில் டெல்லியின் துணைநிலை ஆளுநர் மற்றும் பாஜக-வுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வோம். ஒரு நோயாளியின்/நபரின் மருத்துவ அறிக்கைகளை மறைப்பது, அந்த நபருக்கு தீங்கு விளைவிக்கும் சதியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேஜ்ரிவால், பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ உணவு மற்றும் மருந்துகளை உட்கொள்ளாதது குறித்து சக்சேனா கவலை தெரிவித்ததாகவும், அதைக் கண்டறியுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாகவும் ஆளுநர் அலுவலகத்திலிருந்து, தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட தகவல் தெரிவிக்கிறது.