கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், தலவடி பஞ்சாயத்துக்குட்பட்ட நிரேற்றுபுறம் பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ வி முளய்க்கல் (40). இவரது மனைவி லினி ஆபிரகாம் (35). இவர்களுக்கு ஐரின் (14) என்ற மகளும், ஐசக் (9) என்ற மகனும் இருந்தனர். மேத்யூ வி முளய்க்கல் குவைத்தில் ஒரு தனியார் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். அவரது மனைவி குவைத்தில் ஸ்டாஃப் நர்சாக பணிபுரிந்துவந்தார். இவர்களது மகள் ஐரின் 9-ம் வகுப்பிலும், மகன் ஐசக் 2-ம் வகுப்பிலும் குவைத்தில் உள்ள ஸ்கூலில் படித்து வந்தனர். மேத்யூ வி முளய்க்கல் 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் குவைத்தில் வசித்துவந்தார். மேத்யூ வி முளய்க்கல் குவைத் அம்பாசியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட்டில் வசித்துவந்த்தார். அவ்வப்போது விடுப்புக்காக சொந்த ஊர் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த மாதம் விடுப்புக்காக சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்துவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை குவைத்துக்குச் சென்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு பயண களைப்பில் மேத்யூ வி முளய்க்கல் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அந்த அப்பார்ட்மென்ட்டில் இரவு சுமார் 9:30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்குள்ளவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். மேத்யூ வி முளய்க்கலின் வீட்டு வாசலையும் சிலர் தட்டியுள்ளனர். அப்போது மேத்யூ கதவை திறந்துகொண்டு வெளியே வந்துள்ளார். அந்தச் சமயத்தில் புகைமூட்டம் அதிகமாக இருந்ததால் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். ஆனால் மேத்யூ வி முளய்க்கல் மற்றும் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் புகைமூட்டத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர்.
குவைத்தில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 24 பேர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என 49 பேர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த தீ விபத்தில் மரணம் அதிகரிக்க புகைமூட்டமே காரணமாக அமைந்தது. இந்த நிலையில் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து மீண்டும் குவைத்திற்கு சென்ற அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத்திணறி மரணமடைந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.