சென்னை: சென்னையில் வசிக்கும் நபர் ஒருவர் தவறுதலாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை குப்பையில் கொட்டிய நிலையில், தொலைந்து போன நகையை தூய்மைப் பணியாளர் மீட்டுக்கொடுத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் தேவராஜ். இவர் இன்று (ஜூலை 21) தவறுதலாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை குப்பைகளுடன் சேர்த்து, மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் அர்பேசர் ஸ்மித் நிறுவன குப்பை வாகனத்தில் கொட்டியுள்ளார்.
பின்னர், வீட்டில் நகையை தேடியபோது, குப்பையுடன் சேர்த்து கொட்டப்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்த தேவராஜ், உடனடியாக உர்பேசர் நிறுவனத்தை தொடர்புகொண்டு உதவி கோரினார். அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் குப்பை சேகரித்து வரும் அந்நிறுவனத்தின் குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுநரான அந்தோணி சாமி, அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் தீவிர சோதனை நடத்தி, குப்பைகளின் நடுவே இருந்த வைர நெக்லஸை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
இது நகையின் உரிமையாளருக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், தூய்மைப் பணியாளர் அந்தோணி சாமிக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.