புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, நேற்று முன்தினம் தேசிய தேர்வு முகமை, நகர, தேர்வுமைய வாரியாக நீட் தேர்வு மதிப்பெண்களை வெளியிட்டது.
அவற்றை ஆய்வு செய்ததில், பல்வேறு உண்மைகள் தெரிய வந்தன. ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.
அதே சமயத்தில், நாடு முழுவதும் 2 ஆயிரத்து 250-க்கு மேற்பட்ட மாணவர்கள் பூஜ்ய மதிப்பெண் பெற்றுள்ளனர். 9 ஆயிரத்து 400-க்கு மேற்பட்டோர், பூஜ்யத்துக்கும் குறைவாக ‘மைனஸ்’ மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர் மைனஸ் 180 மதிப்பெண் எடுத்துள்ளார். இதுதான், நடப்பாண்டு நீட் தேர்விலேயே மிகக்குறைவான மதிப்பெண் ஆகும்.
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ஒரு தேர்வு மையம், வினாத்தாள் கசிவு சர்ச்சையில் சிக்கியது. அங்கு தேர்வு எழுதிய பலர் பூஜ்யத்துக்கும் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளனர். பூஜ்யம் எடுத்தவர்கள் ஒரே மையத்தில் அதிக எண்ணிக்கையில் இல்லாமல், பரவலாக பல மையங்களிலும் பிரிந்து கிடக்கின்றனர்.
நீட் தேர்வில், சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் அளிக்கப்படும். தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். பூஜ்யம் மதிப்பெண் என்றால், அந்த மாணவர் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என்று அர்த்தம் அல்ல. அவர் சில கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்ததால் பெற்ற மதிப்பெண்களை, தவறான விடைகளுக்கு இழந்திருப்பார். அந்தவகையில் அவர் பூஜ்யம் மதிப்பெண் பெற்றிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வினாத்தாள் கசிவால் பலன் பெற்றதாக கூறப்படும் மாணவர்கள், அதிக மதிப்பெண் எடுக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
பயிற்சி மையங்களுக்கு புகழ்பெற்ற சிகார், கோட்டா, கோட்டயம் ஆகிய ஊர்களில் தேர்வு எழுதியவர்கள் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். அதே சமயத்தில், பயிற்சி மைய பின்னணி இல்லாதவர்களும் பல நகரங்களில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளனர்.
700-க்கு மேற்பட்ட மதிப்பெண் எடுத்த 2 ஆயிரத்து 300 பேர், 1,404 தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் பயிற்சி மையம் இல்லாத நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
நீட் பாடத்திட்டத்தை மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டத்துடன் இணைத்ததே இதற்கு காரணம் என்று கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.