புதுடெல்லி: ‘‘இந்தியாவில் 2050-ம் ஆண்டுக் குள் முதியவர்களின் எண்ணிக்கை 2 மடங்காகும். அதற்கேற்ப சுகாதாரத் துறையில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும்’’ என்று ஐ.நா.மக்கள் தொகை நடவடிக்கை நிதியத்தின் இந்திய தலைவர் ஆண்டிரீயா ஓஜ்னர் பரிந்துரைத் துள்ளார்.
உலகளவில் மக்கள் தொகையில் பாலின சமத்துவம், பெண்களின் உடல்நலம், குழந்தை பெறுதல், உரிமைகள் போன்றவற்றுக்காக ஐ.நா. சார்பில் தனி நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் இந்திய தலைவர்ஆண்டிரீயா ஓஜ்னர், பிடிஐ.க்குநேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை வரும் 2050-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது. முதியவர்களின் எண்ணிக்கை 346 மில்லியனாக இருக்கும்.
எனவே, அதற்கேற்ப சுகாதார வசதிகள், வீட்டு வசதிகள், ஓய்வூதிய திட்டங்கள் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும். மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தனித்து வாழும் சூழ்நிலை உருவாகும். அதனால், அவர்கள் வறுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மேலும், 2050-ம் ஆண்டுக்குள் 50 சதவீத மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்வார்கள். நகரங்களில் மக்கள்தொகை 50 சதவீதமாகும் போது, பல்வேறு சிக்கல்கள்உருவாகும். குறிப்பாக குடிசைப் பகுதிகள் அதிகரிப்பு, காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை ஏற்படும்.
இதை சமாளிக்க ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கம், வலுவான உள்கட்டமைப்பு, அனைவரும் வீடு வாங்குவதற்கான சூழல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நகர மயமாக்கல் திட்டங்களை செயல்படுத்தும்போது பெண்களின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, பாலின சமத்துவம், ஒட்டுமொத்தமாக வாழ்க்கைத் தரம் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பருவ நிலை மாறுபாடுபெண்கள் கருவுறுதல், கர்ப்பகாலத்தில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும். இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்தால்தான் பாலின சமத்துவம் மற்றும் நீடித்த வளர்ச்சியை எட்ட முடியும். இவ்வாறு ஆண்டிரீயா கூறினார். பருவநிலை மாறுபாடு பெண்கள் கருவுறுதல், கர்ப்பகாலத்தில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும்.