நம் ஊர் வேலியோரங்களில் விளைந்து கிடக்கும் நீலக் கற்றாழையில் முள்ளால் பெயரெழுதி விளையாடியது ஒரு காலம். சில நேரங்களில் இந்தக் கற்றாழையை வெட்டி அதிலிருந்து நார்களைப் பிரித்து கயிறு எடுப்பார்கள். ஆனால், இந்தக் கற்றாழையிலேயே காசு பார்க்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் அமெரிக்க விவசாயிகள்.
ஆனைக் கற்றாழை, யானைக் கற்றாழை, ரயில் கற்றாழை என்று பல பெயர்களில் அழைக்கப்படும் நீலக் கற்றாழை (Agave) மருத்துவ குணம் நிரம்பிய ஒரு தாவரம். உச்சி முதல் உள்ளங்கால் வரை பயனளியக்கக்கூடிய கற்றாழை. மெக்சிகோவை தாயகமாகக் கொண்ட இந்தக் கற்றாழை ஆசியா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் கற்றாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சேலம், தூத்துக்குடி மாவட்டங்களில் கற்றாழை வளர்க்கப்படுகிறது. எனினும், இதில் கணிசமான வருமானம் கிடைக்காது என்ற கருத்து நிலவுகிறது.
கடும் வறட்சியால் பாதித்த கலிபோர்னியா!
இந்நிலையில் அமெரிக்காவில் கற்றாழை மூலம் விவசாயிகள் பெரும் வருமானம் ஈட்டி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. சோற்றுக்கற்றாழை, செங்கற்றாழை, சிறு கற்றாழை என்று பலவகைகள் இருந்தாலும், இதில் நீலக்கற்றாழைதான் லாபம் தரக்கூடிய பயிராக அமெரிக்காவில் இருந்து வருகிறது.
கலிஃபோர்னியா மாகாணத்தில் விவசாய சாகுபடிக்கு அதிகளவு நீரை பயன்படுத்தியதால், அப்பகுதி கிணறுகள் வறண்டு போயின. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்ததால் விவசாயம் செய்ய வழியின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பத்தாண்டுகளுக்கு முன்பு அந்த மாகாண அரசு, நிலத்தடி நீர் பயன்பாடு தொடர்பாக ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. எனினும், நிலத்தடி நீர் குறைவது தவிர்க்கப்படவில்லை; புவி வெப்பமயமாதல் அதிகரித்தது. நீர் இல்லாமல் விவசாய சாகுபடி முடங்கின.
வறட்சிக்கு வரப்பிரசாதம் கற்றாழை!
இதையடுத்து, வறட்சியை தாங்கும் பயிர்களை விவசாயிகள் நாடத் தொடங்கினர். முதலில் 12 விவசாயிகள் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு, நீலக்கற்றாழை சாகுபடியைத்தொடங்கியதோடு இதற்கென கவுன்சிலையும் ஏற்படுத்தினர். விரைவிலேயே இக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
கலிபோர்னியாவை சேர்ந்த விவசாயி ஸ்டூவர்ட் உல்ப் என்பவர், தண்ணீர் பற்றாக்குறையால் 2 லட்சம் நீலக்கற்றாழையை நடவு செய்தார். மற்ற பயிர்களுக்கு தேவைப்படும் நீரில் பத்தில் ஒரு பங்கே இதற்கு தேவைப்பட்டது. சாகுபடி செழிக்க, ஸ்டூவர்ட்டின் வருமானமும் அதிகரித்தது.
மதுபான உற்பத்தியில் கற்றாழை!
எந்தவொரு பயிராக இருந்தாலும் அதற்கு விற்பனை வாய்ப்பு இருந்தால் மட்டுமே தொடர்ந்து சாகுபடி நடக்கும். அந்த வகையில் மருத்துவ குணம் நிறைந்த கற்றாழை அழகு சாதனத்துறையில் பங்களிப்பு செய்து வருகிறது. இதுதவிர மதுபான தயாரிப்புக்கும் இது கைகொடுக்கிறது. மெக்சிகோ நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டகீலா மற்றும் மெஸ்கால் போன்ற மதுபானங்கள் தயாரிப்பில் இவ்வகை நீலக் கற்றாழை பயன்படுகிறது. உயர்தர மதுபானங்கள் தயாரிக்க நீலக்கற்றழையின் தேவை உள்ளதால், இதை சாகுபடி செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
ஒற்றுமையே வலிமை
நீலக்கற்றாழையின் பயன்பாடுகள் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளது கலிபோர்னியா நீலக்கற்றாழை கவுன்சில் (California Agave Council). அதில், “முழுக்க முழுக்க வறண்ட பகுதிகளுக்கான தாவரம் இது. தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு ஏற்றது. மரங்களைப் போன்றே இதுவும் கார்பன் டை ஆக்ஸைடை அதிகளவு ஈர்க்கிறது. 10-12 அடி உயரத்துக்கு வளரும். 25 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். நீரிழிவு நோய்க்கு பயன்படும் இன்சுலின் தயாரிப்பில் பயன்படுகிறது. இதேபோல பயோ டீசல் தயாரிப்பு, பயோ எத்தனால் தயாரிப்பு, கால்நடை தீவனம், ஐஸ் க்ரீம், தேன், கயிறு, நாரிழை. மதுபான தயாரிப்புகளில் பயன்படுகிறது” என்று இதன் பயன்பாடுகளை பட்டியலிட்டுள்ளது.
குறைந்த நீர்த்தேவை, கடும் வறட்சியை தாங்கும் தன்மையால் நீலக்கற்றாழை நடவு கலிபோர்னியாவில் ஒரு லாபமீட்டும் பயிராக மாறியுள்ளது. விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து உற்பத்தி செய்து மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நீலக் கற்றாழையை வெட்டி விற்பனைக்கு அனுப்புகிறார்கள். அதேபோல நீலக்கற்றாழையை எப்படி சாகுபடி செய்வது, எந்த ரகங்கள் ஏற்றவை, கன்றுகள் எங்கு கிடைக்கும் உள்ளிட்ட பல தகவல்களை விவசாயிகள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் விதமாக இந்த கவுன்சில் செயல்படுகிறது.
நமது நாட்டிலும் அழகு சாதனத்துறை, மருத்துவப் பயன்பாடுகளுக்கு கற்றாழைத் தேவை அதிகளவில் உள்ளது. தண்ணீர் பிரச்சனை, மழை பொய்த்துப் போகுதல் போன்ற சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதை இங்கு சாகுபடி செய்து வருமானம் ஈட்ட முடியுமா என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் துறையின் தலைவர் முனைவர் சரஸ்வதியிடம் பேசியபோது, “மருத்துவ பயன்பாடுகள் கொண்ட இந்தக் கற்றாழையை சாகுபடி செய்ய முடியும். ஆனால், இதற்கான விற்பனை வாய்ப்பு இங்கு குறைவு.
காற்றாழை சாகுபடியில் ஆர்வம் இருக்கும் விவசாயிகள் சோற்றுக் கற்றாழையைச் சாகுபடி செய்யலாம். காரணம், சோற்றுக் கற்றாழைக்கு இங்கு மார்க்கெட் இருக்கிறது. ஆனால், Agave என்றழைக்கப்படும் நீலக் கற்றாழைக்கு விற்பனை வாய்ப்பு குறைவு. ஏதாவது நிறுவனங்கள், இதை வாங்கிக் கொள்கிறது என்றால் தாராளமாக சாகுபடி செய்யலாம். இந்த நீலக் கற்றாழை சார்ந்த ஆராய்ச்சிகள் பெருகினால், இந்தப் பயிருக்கும் வருமான வாய்ப்புகள் பெருகும்” என்றார்.
மத்திய அரசின் மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் ஆராய்ச்சி நிறுவனம், இதுகுறித்தான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. விரைவில் இதுசார்ந்த அறிக்கை வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.