வெள்ளம் மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க வேண்டியேற்படும்

• தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க.

பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுத்து நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டது போன்றே, வெள்ளம் மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்றும், அதன் பிரதிபலன்கள் இன்னும் சில வருடங்களில் தெரியும் எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

 

நாட்டு மக்கள் என்ற வகையில் தமது கடமைகளை சரியாக செய்தால் டெங்கு நோய் இந்தளவுக்கு பரவாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் – கொழும்புக் கிளையால் நடத்தப்படும் வெள்ள அபாயங்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றிய தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இங்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க கூறியதாவது,

 

“அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், அரசாங்கம், பல்வேறு அமைப்புகள், நாடுகள் பெருமளவில் பணம் செலவிட வேண்டியுள்ளது. வெள்ள நிலை ஏற்படுவதற்கு முன்பே அதைத் தணிக்க நடவடிக்கை எடுத்தால், வெள்ளச் நிலைமையில் நாம் செலவழிப்பதை விட அதிகப் பணத்தைச் சேமிக்க முடியும்.

 

மேலும், டெங்குவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான செலவு, டெங்கு நோய்க்கான சுகாதார சேவைகளின் செலவை விட மிகக் குறைவாக இருக்கும் என்பதையும் கூற வேண்டும். உயிரிழப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பணத்தால் மதிப்பிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

இவை அனைத்தையும் பற்றி சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது. இந்த முடிவுகள் பிரபலமாக இல்லாமல் இருக்கலாம். பிரபலமாக இல்லாவிட்டாலும் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். பிரபல்யமற்ற முடிவுகளை எடுத்ததால் தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வர முடிந்தது. அத்தகைய முடிவுகளின் பலனை சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் கண்டுகொள்ள முடியும்.

 

நாம் செய்த கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புகள் காரணமாக, வர்த்தகம், தொழில்துறை மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள முடிந்தது. தற்போதைய அரசாங்கம் மோசடி மற்றும் ஊழலைக் குறைப்பதற்கான கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் பிரபல்யமானதாக இருக்கவில்லை. ஆனால் இலங்கையில் தேர்தல்கள் நெருங்கும் போது பிரபலமான முடிவுகளை எடுப்பதே வழக்கமாக இருந்துள்ளது.

 

ஆனாலும், வெள்ளம், டெங்கு போன்ற பிரச்சினைகளில் பிரபல்யமற்ற கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. கடந்த அனர்த்த நிலைமைகளின்போது, எமது நாட்டின் பொறிமுறை, மக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் அந்த அனர்த்த நிலைமைக்கு பெரிதும் தாக்கம் செலுத்தியுள்ளமையை கண்டுகொள்ள முடிந்தது. அதன்படி தவறான இடத்தில் வீடு கட்டப்பட்டு, வடிகால்கள் அடைக்கப்பட்டு, சிலர் வயல் நிலங்களை நிரப்பி தங்கள் வீட்டிற்கு செல்ல வீதிகளை அமைத்திருப்பதையும் காண முடிகிறது.

 

நகரில் தேங்கியுள்ள நீர் வெளியேற முடியாமல் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அல்லது ஆற்றைத் தடுத்து, ஒரு தாழ்வான நிலத்தை நிரப்பி காணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அல்லது தவறான அனுமதியைப் பெற்று அல்லது திருட்டுத்தனமாக சதுப்பு நிலங்கள் நிரப்பப்படுகின்றது.

 

இல்லையெனில், அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டு,நிலங்களை நிரப்பும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இவ்வாறான பல்வேறு தவறுகள் இன்று நாம் இருக்கும் நிலைக்கு நம்மை இட்டுச் சென்றுள்ளது. அப்படியானால், இந்த தவறுகள் இப்போதேனும் திருத்தப்பட வேண்டும்.

 

டெங்கு நோயும் இதே நிலையை எட்டியுள்ளது. மக்களாகிய நாம் நமது பொறுப்பை சரியாக நிறைவேற்றினால் டெங்கு நோய் இந்தளவு பரவாது.

 

அப்படியானால், இந்த நிலைமையை கட்டுப்படுத்த சட்டங்களை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இந்த நாடு கட்டியெழுப்பப்படாது.

 

கொழும்பு வேகமாக அபிவிருத்தி செய்யப்பட தயாராக இருந்தாலும், அபிவிருத்தியடைந்த பின்னரும் வெள்ளத்தில் மூழ்கினால், அந்த அபிவிருத்தியில் பயனில்லை. நாம் நீரில் மூழ்காமல் அபிவிருத்தி செய்ய வேண்டும்.பொதுமக்கள் மற்றும் அரச அலுவலர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரச நிதியை பயன்படுத்த வேண்டும்.

 

பழைய தரவுகளின் அடிப்படையில், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எந்தத் துறையிலும் முடிவுகளை எடுக்க முடியும். அதன்போது, தவறுகளை பெருமளவு குறைக்க முடியும். வானிலை முறைகள், புவியியல் தரவு, செயற்கைக்கோள் படங்கள், சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவற்றை பகுப்பாய்வு செய்து அனர்த்தங்களின் நிகழ்தகவுகளை கணிக்க முடியும். இதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் இணைந்து தலைமைத்துவம் ஏற்று செயற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் ஜகத் அபேசிங்க, பணிப்பாளர் நாயகம் வைத்தியர் மகேஷ் குணசேகர மற்றும் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.