வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அந்நாட்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட தேவையான கட்சி பிரதிநிதிகளின் ஆதரவை வென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் நடந்த முதல் வாக்கெடுப்பில், அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தேவையான 1,976 பிரதிநிதிகளின் ஆதரவை அவர் பெற்றுள்ளார்.
அதிபர் தேர்தலின் குடியரசுக் கட்சித் தலைவர் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக, அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் கட்சி வட்டாரங்கள், உள்கட்சியில் எழுந்த எதிர்ப்பினைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக பைடன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜனநாயக கட்சியின் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகரித்தது. அதிபர் ஜோ பைடன் தனது ஆதரவை கமலா ஹாரிஸுக்கு தெரிவித்த 36 மணி நேரத்துக்குள் திங்கள்கிழமை இரவு (அமெரிக்க நேரப்படி) கமலா ஹாரிஸுக்கு ஆதரவு கூடியது.
இது குறித்து கமலா ஹாரிஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றிரவு, எங்கள் கட்சியின் வேட்பாளராக ஆவதற்கு தேவையான ஆதரவை பெற்றது குறித்து பெருமை அடைகிறேன். அடுத்த சில மாதங்கள் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து, அமெரிக்கர்களின் தற்போதைய பிரச்சினைகள் பற்றி பேசுவேன். கட்சியையும், நாட்டையும் ஒன்றிணைத்து அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பை தோற்கடிக்க நான் தீர்மானித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் இத்துடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் முக்கியமான போட்டிக்களமான விஸ்கான்சினில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். விஸ்கான்சிஸ் பயணம், ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரத்தை மீட்டெடுக்கவும், ட்ரம்ப்புக்கு எதிராக வலுவான வேட்பாளராக காட்டவும் கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு அளிக்கும் எனத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து மில்வாகீயில் நடைபெறும் அரசியல் நிகழ்வில் கமலா ஹாரிஸ் பேசவுள்ளார்.
திரண்ட நன்கொடைகள்: கடந்த சில மாதங்களாக அதிபர்ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரத்துக்காக நிதி திரட்டி வந்தார். ஆனால் நன்கொடையாளர்கள் தாராளமாக நிதி வழங்கவில்லை. அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து அவர் விலகிய நிலையில், கமலா ஹாரிஸ் தேர்தல் நிதி திரட்டும் பணியைத் தொடங்கினார். முதல் 7 மணி நேரத்தில் மட்டும் கமலாவுக்கு ரூ.391 கோடி நன்கொடை குவிந்தது. மிக குறுகிய நேரத்தில், மிக அதிக அளவில் நன்கொடை குவிந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை.
அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், கமலா ஹாரிஸுக்கு பக்கபலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் உள்பட ஏராளமான தலைவர்கள் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்களாக களமிறங்க திட்டமிட்டிருந்த கலிபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம், அமெரிக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் பீட் புட்டிகீக் ஆகியோரும் கமலாவை பகிரங்கமாக ஆதரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.