“தமிழகத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான கோயில் கனிம வளங்கள் கொள்ளை” – இந்து முன்னணி கண்டனம்

சென்னை: “ரூ.200 கோடி மதிப்பிலான திருக்கோயில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயில்களுக்கு வரும் அப்பாவி பக்தர்களிடம் பலவித கட்டணங்களை வசூலித்து கொள்ளையடிக்கும் இந்து சமய‌ அறநிலையத் துறை, இந்து கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ரூ.198 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படும் வரை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது அறநிலையத் துறை. வேடிக்கை மட்டும் பார்ப்பதற்கு எதற்கு அறநிலையத் துறை, கோவிலை விட்டு வெளியேறலாமே.! மேலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பக்தர்களிடம் பலவிதத்தில் கட்டணங்களை வசூலித்து அதில் சுகபோக வாழ்க்கை நடத்துகிறது இந்து அறநிலையத் துறை.



மேலும், அதிகாரிகள் துணையின்றி கோவில் நிலங்களின் கனிம வளங்கள் கொள்ளையடிக்கபட்டு இருக்க முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியதாகும். கிட்டத்தட்ட 200 கோடி மதிப்புள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்க துணைபோன அனைத்து அதிகாரிகளையும், அமைச்சரையும் நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும்.

நீதிமன்றம் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எந்தவிதமான சமரசமுமின்றி அகற்ற வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு கோயில் சார்ந்த நீர்நிலைகளான குளங்களை காப்பதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே சமயம் நீர்நிலைகளில் இருப்பதாக கோவில்களை இடித்து தள்ளுவதில் ஆர்வம் காட்டுகிறது. கோயில் நிலங்களில் கோவில் குளங்களில் மணல், பாறைகள் கருங்கற்கள் திட்டமிட்டு சுரண்டப்படுகிறது. இதன் மூலம் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பிழைப்பு நடத்துகின்றனர்.

சென்னை அயனாபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோவில் திருக்குளத்தில் பல நூறு லாரிகளில் கனிமவளங்கள் திருடப்பட்டதை இந்து முன்னணி கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்ய வைத்தது. சென்னை மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுத்தார். ஆனால் கோவில் நிர்வாகம் செய்வதற்காக சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அந்த கயவர்களை தப்பிக்க துணைபோயினர் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

எனவே தொடர்ந்து கோயில் வளங்கள் பல விதத்திலும் திருடப்படுகின்றன. இதற்கு துணை போகும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கொஞ்சமும் வெட்கமின்றி நீதிமன்றத்தில் வழக்கு ஒப்புதலாக அறிக்கை கொடுத்துள்ளது. முறைகேடுகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கவில்லை என பதில் கூற வேண்டியது அதிகாரிகளின் கடமை. இனியேனும் இதுபோன்ற நடைபெறாமல் தடுத்திட கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.