திருமூர்த்தி அணை நிரம்பவில்லை… கேரளாவுக்கு செல்கிறதா உபரி நீர்?கேள்வியெழுப்பும் விவசாயிகள்!

கேரளா மற்றும் தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதையொட்டி பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின்(PAP) கீழ் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வர வேண்டும். ஆனால், இந்த முறை போதுமான தண்ணீர் இன்னும் வரவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி செஞ்சேரிமலை கதிரேசனிடம் பேசியபோது, “பி.ஏ.பி திட்டத்தில் கான்டூர் கால்வாய் 49 கி.மீ தொலைவுக்கு மலைத்தொடரில் அமைந்துள்ளது. போதிய பராமரிப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் கால்வாய் சிதிலமடைந்து, தண்ணீர் இழப்பு ஏற்பட்டு, திருமூர்த்தி அணைக்கு போதிய நீர்வரத்து கிடைப்பதில்லை.

பல ஆண்டுகளாக கான்டூர் கால்வாய் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகள், ஜவ்வாக நீள்கிறது.

பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாய்

இந்த ஆண்டில் 3 இடங்களில், 700 மீட்டர் நீளத்துக்கு கால்வாய் புதுப்பிப்பு பணிகள் தொடங்கின. சர்க்கார்பதி பவர் ஹவுஸ் மற்றும் திருமூர்த்தி அணையை இணைக்கும் கான்டூர் கால்வாயில் கான்கிரீட் கரை அமைக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் பெய்த பருவமழையால், பி.ஏ.பி தொகுப்பு அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. தொகுப்பு அணைகள் நிரம்பிய போதும் திருமூர்த்தி அணை நிரம்பவில்லை. திருமூர்த்தி அணையை நம்பி 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இருந்து வருகின்றன. ஆண்டுக்கு நான்கு முறை திறக்க வேண்டும். சென்றாண்டு 2 முறைதான் அணை திறக்கப்பட்டது. ஆடி மாதம் வழக்கமாக அணை திறக்கப்படும். ஆனால், இந்த முறை அணை திறக்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.

திருமூர்த்தி அணையில் 1.5 டி.எம்.சி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். திருமூர்த்தி அணையில் இருந்து ஆகஸ்ட் மாதம் இரண்டாம் கட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது.

திருமூர்த்தி அணைக்கு முக்கிய நீர் ஆதாரம் கான்டூர் கால்வாய்தான். தற்போது கால்வாயில் மராமத்து பணிகள் நடந்து வருகின்றன. இந்தக் கால்வாய் பணிகளை பருவ மழைக்குள் செய்து முடித்தால் நன்றாக இருக்கும். தற்போது கிடைக்கும் அணைகளின் உபரி நீர் கேரளாவுக்கு செல்கிறது. அதனால் கால்வாயின் செய்யப்படும் மராமத்து பணிகளை நிறுத்தி திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரவைக்க வேண்டிய வழிகளை ஆராய வேண்டும்” என்றார்.

பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனம்

நீர்வள ஆதாரத்துறை வட்டாரங்கள் கூறுகையில், “தொடர் மழையால் கான்டூர் கால்வாய் பணியை, ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் முடிக்கவும் ஆகஸ்ட் 15 முதல் திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம். ஆகஸ்ட் இறுதியில் தான் திருமூர்த்தியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். அதற்குள் அணை நிரம்ப வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பி.ஏ.பி. பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து, போராட்டம் நடத்த சில விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.